அத்திக்கடவு  திட்டம் வருகின்ற ஜூன் மாதம் பயன்பாட்டிற்கு வரும்… அமைச்சர் மு.பெ சாமிநாதன் உறுதி.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின் ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பேசிய தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன், அத்திக்கடவு அவிநாசி திட்டமானது பவானி ஆற்றில் காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ்புறத்திலிருந்து ஆண்டொன்றிக்கு 1.50 டி.எம்.சி உபரி நீரை நீரேற்று முறையில் நிலத்தடியில் குழாய் பதிப்பின் மூலம் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மொத்தம் 24.468 ஏக்கர் நிலம் பயன்பெறும் வகையில் 32 பொதுப்பணித்துறை ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றிய ஏரிகள் மற்றும் 971 குளம் குட்டைகள் நீர் நிரப்பும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தினை நீரேற்று முறையில் செயல்படுத்திட தமிழ்நாடு அரசின் மூலம் ரூ.1756.88 கோடி மதிப்பீட்டில் பூர்வாங்க மற்றும் மேம்பாட்டுப் பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.  இத்திட்டத்தின் பிரதானப் பணிகள் தொடங்கப்பட்டு பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தற்போது 99.00% சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. பவானி ஆற்றின் குறுக்கே திருப்பணை மற்றும் ஆறு நீர் உந்து நிலையங்களுக்கான பவானி, நல்லக்கவுண்டன்பாளையம், திருவாச்சி, போலநாயக்கன்பாளையம், எம்மாம்பூண்டி அன்னூர் கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ளது.  இத்திட்டத்தில் MS குழாய் பதிக்கும் பணிகள் 2675 கி.மீ. நீளத்திற்கு முடிவடைந்துள்ளது. 

மற்றும் HDPE குழாய்கள் பதிக்கும் பணிகள் தற்போத துரிதமாக நடைபெற்று வருகிறது. தற்சமயம் சுமார் 797.50 கி.மீ. அளவு HDPE குழாய் பதிக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மின்மாற்றிகள், VT பம்புகள், மின்மோட்டார்கள், சுவிட்ச்கியர் மற்றும் பேனல் போர்டு ஆகியவை அனைத்து நீர் உந்து நிலையங்களிலும் பொருத்தப்பட்டுள்ளது. மின் கம்பங்கள் அமைக்கும் பணி மற்றும் பூமிக்கடியில் மின்சார தொடரமைப்புகள் பதிக்கும் பணி 100% முடிவுற்றுள்ளது.  குளம் குட்டைகளில் Outlet Management System (OMS) பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது,

இத்திட்டமானது 20.02.2023 முதல் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டு தற்போது வரை ஆறு நீரேற்று நிலையங்கள் மற்றும் பிரதானக் குழாய்களுக்கு சோதனை ஓட்டம் முடிக்கப்பட்டுள்ளது. மேலும் நீரேற்று நிலையங்களின் இடையிலுள்ள கிளைக் குழாய்கள் மற்றும் 1,045 குளம் குட்டைகளில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. அனைத்து சோதனை ஓட்டப்பணிகள் முடிக்கப்பட்டு இத்திட்டமானது தமிழக முதல்வர் கையால் எதிர்வரும் ஜூன் 2023-ல் பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

இந்த அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் 428 ஏரி, குட்டைகள் தண்ணீர் நிரப்பப்பட்டு 8,151.71 ஏக்கர் விவசாய நிலங்களும், ஈரோடு மாவட்டத்தில் 359 ஏரி, குட்டைகள் தண்ணீர் நிரப்பப்பட்டு 8,767.69 ஏக்கர் விவசாய நிலங்களும் மற்றும் கோயமுத்தூர் மாவட்டத்தில் 258 ஏரி, குட்டைகள் தண்ணீர் நிரப்பப்பட்டு 7,548.58 ஏக்கர் விவசாய நிலங்களும் பயன்பெறும் என கூறினார்.

முன்னதாக ஊத்துக்குளி குளம், குன்னத்தூர் குளம், ஆதியூர் குளம், மேற்குபதி குளம். ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஊராட்சி ஒன்றியம் கிரே நகர் நீரேற்று நிலையம், மற்றும் நம்பியூர் ஊராட்சி ஒன்றியம் இமாம்பூண்டி நீரேற்று நிலையங்களில் அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தின் மூலம் நீரேற்றம் செய்வதை ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்பொழுது திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *