பிரிவினைவாத பாஜக மக்களிடமிருந்து பிரிந்து விட்டது… கர்நாடக தேர்தல் பற்றி திருமா…!

பாஜகவின் பிரிவினைவாத அரசியலை மக்கள் வெறுத்து விட்டார்கள் என்பதற்கு கர்நாடக தேர்தல் முடிவுகளே சான்று எனவும், அகில இந்திய அளவில் பாஜகவிற்கு எதிரான இயக்கங்கள் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் திருமாவளவன் பேசியுள்ளார்

மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில், “சுற்றி வளைக்குது பாசிசப்படை, வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு” எனும் தலைப்பில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்ற மாநாட்டில் விசிக தலைவர் திருமாவளவன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட பல்வேறு அமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

மாநாட்டில் திருமாவளவன் பேசுகையில், “ஆர்.எஸ்.எஸ். – பாஜக கூட்டு களவானிகளின் ஆட்சி தான் இந்தியாவை பாழ்படுத்தி கொண்டிருக்கிறது. அவர்களுடைய சுரண்டல் வெறும் பொருளியல் சுரண்டல் மட்டுமல்ல. சாதி, மதத்தின் பெயரால் பிரிவினை வாதத்தின் சுரண்டலாகவும் வலுப்பெற்று வருகிறது.

இந்தியாவில் பாசிசத்துக்கு கூடுதல் பண்பு இருக்கிறது. இந்தியாவில் சனாதன பாசிசம் இருக்கிறது. சாதியின், மதத்தின் பெயரால் மக்களை பாகுபாடு செய்கிற பண்பு இந்தியாவில் மட்டுமே உள்ளது. சனாதனத்தின் பண்பு பிறப்பின் அடிப்படையில் உழைக்கும் மக்களை துண்டு துண்டாக பிளவு படுத்துகிற ஆபத்தான பண்புகளை கொண்டுள்ளது. இந்தியாவில் எந்த சமூக பெண்களாக இருந்தாலும் அவர்கள் ஆண்களுக்கு கீழானவர்கள், பெண் சமூகம் 100% சூத்திரர்கள் என வரையறை செய்துள்ளது சனாதனம். இந்த பாகுபாடு உலகத்தில் வேறு எந்த தேசத்திலும் கிடையாது. 

ஆர்.எஸ்.எஸ். இயக்கம் 60 வயதில் பிரசவித்த பிள்ளை தான் பாஜக. பாஜகவை, காங், கம்யூனிஸ்ட் போல ஒரு சராசரியான அரசியல் கட்சியாக பார்க்க கூடாது. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துகிற கட்சி பாஜக. மதம் சார்ந்த நம்பிக்கைகளை துருப்புச் சீட்டுகளாக வைத்துள்ளார்கள். இந்துத்துவாவை எதிர்த்தால் இந்துக்களை எதிர்ப்பதாக அவர்கள் திருப்புகிறார்கள். இந்துத்துவா என்பதற்கு பின்னால் ஆர்.எஸ்.எஸ்., பாஜக ஒளிந்து கொள்கிறது.

சனாதனத்தை, வைதீகத்தை தனிமைப்படுத்த வேண்டும் என்பது இந்தியாவில் புத்தர் காலம் முதல் தொடரும் அரசியல் பாரம்பரியம். அதை அடியொற்றி தான் தமிழ் மண்ணில் அயோத்தி தாசர் அடையாளப்படுத்தினார். சனாதன எதிர்ப்பை முன்வைத்தே திராவிடர் சொல்லாடலை அவர் பயன்படுத்தினார். சித்தர்கள், வள்ளுவர், அவ்வையார், பெரியார், அம்பேத்கர் வரை அனைவரும் சனாதன எதிர்ப்பாளர்களே.

இந்துத்துவா என்ற கோட்பாட்டின் கீழ் பார்ப்பனர் அல்லாதவர்களையும் அடைக்கிறார்கள். இதன் வழியாக பார்ப்பன எதிர்ப்பை முறியடிக்க முயற்சிக்கிறார்கள். இஸ்லாமியர்களை, கிறித்தவர்களை எதிர்ப்பது மட்டுமல்ல இந்துத்துவாவின் நோக்கம். இந்து பெரும்பான்மை வாதத்தை நிலைநாட்டுவது தான் அவர்களின் நோக்கம்.  அதன் வழியாக ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே நாடு, ஒரே ஆட்சி என்பதே பாஜகவின் நோக்கம். 

தமிழகத்தில் தலித் ஒற்றுமையை சிதைத்து விட்டது சனாதனம். தீவிர இடதுசாரி அரசியல் பேசியவர்கள் எல்லாம் இப்போது தீவிர வலதுசாரி அரசியல் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பாஜக தமிழ்நாட்டில் காலூன்றுவது மிக ஆபத்தானது. 

இன்று கர்நாடகாவில் காங்கிரசை வெற்றி பெற வைத்தவர்கள் 40% இந்துக்கள் தான். அந்த மக்கள் பாஜக பேசிய மதப்பிரிவினை அரசியலை வெறுத்துள்ளார்கள் என்பதற்கு இதுவே சான்று. ஹிஜாப் உள்ளிட்ட பல பிரச்சனைகளை முன்வைத்த பாஜகவை மக்கள் தூக்கி இருந்துள்ளார்கள். அகில இந்திய அளவில் ஜனநாயக சக்திகள் இணைய வேண்டும். நமக்கிடையில் எவ்வளவு முரண்கள் இருந்தாலும் நாம் சேர வேண்டும். கருத்தியல் முரண்கள் இருந்தாலும் பாஜகவுக்கு எதிரான இயக்கங்கள் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம்” என கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *