எடப்பாடி பழனிசாமிக்கு ‘செக்’ வைத்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறை…!

வேட்பு மனுவில் பொய்யான தகவலை தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் எடப்பாடி பழனிச்சாமியிடம் விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் முடிவு புகார்தாரர் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு சம்மன் அனுப்பி தனித்தனியாக விரைவில் விசாரணை நடைபெறும் என்று தகவல்

கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடும் போது ,  வேட்பு  மனுவில் சொத்து விபரம் குறித்து தவறான தகவலை அளித்துள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி மீது தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மிலானி என்பவர் சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் இது குறித்து உரிய விசாரணை நடத்திட வேண்டும் என்று சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல் துறைக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தது. அதுமட்டுமல்லாமல் வருகின்ற 26 ஆம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருந்தது.

இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வேட்பு மனுவில் சொத்து விபரம் குறித்து தவறான தகவல் அளித்த எடப்பாடி பழனிச்சாமி மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் 125 A (1) (2) (3)என மூன்று பிரிவுகளின் கீழ்  வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல் கட்டமாக எடப்பாடி பழனிச்சாமியின் வங்கி கணக்குகள்,  சொத்து  விவரங்கள் மற்றும் வருமான வரி செலுத்தியதற்கான ஆவணங்கள் ஆகியவற்றை  திரட்டி வரும்,  காவல்துறையினர் அடுத்த கட்டமாக எடப்பாடி பழனிச்சாமியிடம் நேரடியாக விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நாள் விரைவில் அவருக்கு சம்மன்  அனுப்பி விசாரணை நடத்தவும் முடிவு செய்துள்ளனர். 

புகார் தாரரான மிலானி மற்றும் குற்றம் சாட்டப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவருக்கும் சம்மன் அனுப்பி தனித்தனியாக விசாரிக்க முடிவு செய்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *