தொண்டர்கள் மீது வழக்கு போட்டால்… அதிமுக  ஆட்சிக்கு வந்தால் அவ்ளோதான்… போலீசாரை மிரட்டிய ஈபிஎஸ்..!

சேலம் தாதகாப்பட்டி மைதானத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற மே தின விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற எடப்பாடி பழனிச்சாமி ,  அதிமுக தொண்டர்கள் மீது பொய் வழக்கை பதிந்தால் , ஆட்சி மாறும்போது உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது என போலீஸ் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும்  வகையில் ஆவேசமாக பேசினார்.

சேலம் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் சேலம் மாநகர், தாதகாப்பட்டி மைதானத்தில் மே தின விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாஜலம் தலைமையில் நடந்த மே தின விழா பொதுக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், ஜெயலலிதாவுக்கு பிறகு முதல்வரான நான் ,  ஏராளமான திட்டத்தை தமிழகத்திற்கு கொண்டு வந்தேன்.  இதில் சேலம் மாவட்டம்  முதன்மையான மாவட்டமாக திகழ்கிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஈரடுக்கு  மேம்பாலம் , பெரியார் பேரங்காடி , குமரகிரி ஏரி சீரமைப்பு , மாநகராட்சி தொங்கும் பூங்கா திருமண மண்டபம் , நேரு கலையரங்கம் கட்டிடம்,   பாதாள சாக்கடை திட்டம் ,  ஏழை மாணவர்களுக்காக சட்டக் கல்லூரி,  போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலங்கள் என ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தேன். 

இந்நிலையில் அதிமுக தொண்டர்கள் சமூக வலைதளம் மூலம் திமுக ஆட்சியின்  தவறுகளை சுட்டிக் காட்டினால்,  அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்கிறார்கள்.  ஆட்சி மாறும் ,  காட்சிகளும் மாறும்  என்பதை  போலீஸ்  அதிகாரிகள்  எண்ணிப் பார்க்க வேண்டும் , இல்லையேல்  உங்களை எவராலும் காப்பாற்ற முடியாது என எச்சரிக்கும் வகையில் பேசினார். தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி நான் சட்டமன்றத்தில் இரண்டு மணி நேரம் பேசியதை ஒளிபரப்பாமல்,  கேள்விக்கான பதிலை மட்டும் காட்டுகிறார்கள்.  கேள்வி தெரிந்தால் தானே பதில் மக்களுக்கு தெரியும்,  எனவே சட்ட சபை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும்.

எங்களது ஆட்சியில்  11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வந்தோம்.  சேலம் மாவட்டம் தலைவாசலில் ஆயிரம் கோடி ரூபாய்  மதிப்பில் கால்நடை பூங்கா ,  மேலும் ஏராளமான கல்லூரிகளை கொண்டு வந்ததின் மூலம் ,   உயர்கல்வி படிப்பதில் 2030 ஆம் ஆண்டில் அடைய வேண்டிய இலக்கை 2019 ஆம் ஆண்டிலேயே அடைந்தோம் என்றார்.

கடந்த 22 மாதத்தில் நீட் தேர்வு பயத்தினால் 14 மாணவர்கள் உயிரை மாய்த்து கொண்டுள்ளனர்,  ஆனால் நீட் தேர்வு குறித்து பொய்யான விளக்கங்களை அளித்து வருவதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *