திமுக கூட்டணியில் சேருகிறதா பாமக “கலைகிறது” மவுனம் ! நெருங்கும் க்ளைமேக்ஸ்?

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

வரும் எம்பி தேர்தலில், யாருடன் கூட்டணி என்பது குறித்த கேள்விக்கு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பதிலளித்துள்ளார்.. என்ன சொல்கிறார் அன்புமணி?சமீப காலமாகவே, திமுகவுடன் பாமக கூட்டணிக்கு முயல்வதாக தகவல்கள் வட்டமடித்து வருகிறது.. ஆனால், நெய்வேலி விவகாரத்தினால், திமுக அரசு மீது பாமகவுக்கு அதிருப்தி வெளிப்பட்டது..வெளிப்படையாகவே திமுக தரப்பை விமர்சிக்கவும் செய்தார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.. இந்த விவகாரத்தையடுத்து, வன்னியர் இடஒதுக்கீடு விவகாரத்தில் இந்த உரசலும் விரிசலும் அதிகமாகி கொண்டே வருகிறது.அந்தவகையில், முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறது பாமக.. திமுக ஆட்சி வந்ததுமே, இந்த இடஒதுக்கீடுக்கு எதிராக நீதிமன்றத்துக்கு பிரச்சனை சென்றதால், சாதிவாரி கணெக்கெடுப்பு நடத்தாமல் எந்த டேட்டாவை வைத்து இடஒதுக்கீடு வழங்கப்பட்டது? என நீதிமன்றம் எழுப்பிய கேள்வியால், இந்த இடஒதுக்கீடு சட்டம் அமல்படுத்தப்படவில்லை.

இதனால் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் வன்னியர் சமூகம் பாதிக்கப்பட்டது. இதற்கிடையே, தரவுகளை சேகரிப்பதற்காக திமுக அரசால் அமைக்கப்பட்ட கமிட்டியும் தனது பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்காததால், கமிட்டியின் காலத்தை சமீபத்தில் நீடித்தது திமுக அரசு. இந்தநிலையில் தான், வன்னியர் சமூகத்திற்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை மே 31-க்குள் நடைமுறைப்படுத்தி சமூகநீதியை நிலை நாட்டவேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார் பாமக தலைவர் அன்புமணி. இந்த கடிதத்தை தபால் மூலமாக அனுப்பி வைத்துள்ளார்.இப்படி, முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்புவதை ஒரு வேள்வியாக, ஒரு இயக்கமாக நடத்திட வேண்டும் என பாமகவினரையும் வன்னிய சமூகத்தினரையும் அன்புமணி வலியுறுத்தி வருகிறார். மே மாதத்திற்குள் 1 கோடி கடிதங்கள் முதல்வர் ஸ்டாலின் அலுவலகத்தில் குவிய வேண்டும் என பாமகவில் திட்டமிடப்பட்டுள்ளதாம்.. பாமக முன்னெடுத்துள்ள இந்த போராட்டத்துக்கு திமுக என்ன பதிலை தரப்போகிறது என்று தெரியவில்லை.. மற்றொருபக்கம், அதிமுகவை பெரிதாக விமர்சிக்காமல் உள்ளது பாமக. நீதிமன்ற உத்தரவுகள் மூலம் அடுத்தடுத்த கட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமி நகர்ந்து வரும்நிலையில், ஒவ்வொருமுறையும், அவருக்கு அன்புமணி ராமதாஸ் மறக்காமல் வாழ்த்தையும் சொல்லி கொண்டு வருகிறார்.. அதேசமயம், பாமக யாருடன் கூட்டணி என்ற கேள்வியை செய்தியாளர்கள் கேட்கும்போதெல்லாம், இன்னும் டைம் இருக்கிறது, ஆனால், 2026-ல் பாமக தமிழகத்தில் ஆட்சி பிடிக்கும் என்பதையும் வலிய பதிவு செய்து வருகிறார் அன்புமணி ராமதாஸ்.. நேற்றைய தினம் கூட செய்தியாளர்கள் இந்த கேள்வியை அன்புமணியிடம் கேட்டனர்..

வரும் தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்க போகிறீர்கள்? என்று செய்தியாளர்கள் கேட்டதுமே, “காலம் இருக்கிறது.. அடுத்த வருடம்தானே தேர்தல் வருகிறது” என்றார்.. அதற்கு செய்தியாளர்கள், “பாமக களம் மாறுதுன்னு சொல்றாங்களே” என்று கேட்டதற்கு, “யார் சொல்றது? சொல்றதெல்லாம் நீங்கதான்.. ஊடகம் பேசுற பேச்சு அது.. எங்க பேச்சு எதுவுமே இல்லை.. எங்களுக்கு ஒரே பேச்சுதான்.அப்போதிருந்து இப்போவரைக்கும் ஒரே பேச்சைதான் பேசிக்கொண்டிருககிறோம்.இப்போதைக்கு முடிவு எதுவும் எடுக்கவில்லை” என்றார்.இதையடுத்து செய்தியாளர்கள், “பாமக தனித்து நிற்குமா?” என்று கேட்டனர்.. உடனே அன்புமணி சிரித்துவிட்டு, “நீங்க எப்படி கேட்டாலும் எங்கள் பதில் இதுதான்.. இன்னும் முடிவு செய்யவில்லை.. தேர்தல் சமயத்தில், நாங்கள் கூடி, முடிவெடுப்போம்.. அப்போது கண்டிப்பாக உங்களிடம் சொல்லிட்டுதான் அறிவிப்போம்.. ஆனால், எங்களின் நிலைப்பாடு, 2026-ல் தமிழகத்தில் பாமக ஒருமித்த கருத்துள்ள கட்சிகளுடன் இணைந்து, கூட்டணி ஆட்சியை அமைப்போம். அதற்கேற்ற வியூகங்களை 2024-ல் நாங்கள் எடுப்போம் என்றார்உடனே செய்தியாளர்கள், அந்த ஒருமித்த கட்சிகள் என்னென்ன? என்று கேட்டனர்.. அதுக்குள்ளேயே உடனே குழந்தை பெத்து, உடனே பேர் வெச்சி… இருங்க.. ஒவ்வொன்னா மெதுவா நடக்கணும் இல்ல என்று கேஷூவலாக பதில் அளித்தார்.. ஆக மொத்தம், யாருடன் கூட்டணி என்று கடைசிவரை அன்புமணி சொல்லவேயில்லை.. மறுபடியும், சஸ்பென்ஸை வைத்துவிட்டு போயுள்ளார்.. யாருடன்தான் கூட்டணி வைக்க போகிறார்? பொறுத்திருந்து பார்ப்போம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *