எடப்பாடி தரப்பு எகிற..வெடிக்கும் ஓபிஎஸ் டீம்!

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

அதிமுக கொடியில் அண்ணா உருவத்துக்கு அருகில் இரட்டை இலை சின்னம் உள்ளது போன்ற கொடிகள் திருச்சியில் ஓபிஎஸ் அணி நடத்தும் மாநாட்டுக்காக கட்டப்பட்டுள்ளன. இது எடப்பாடி பழனிசாமி தரப்பின் சட்ட நடவடிக்கைக்கு பயந்து எடுக்கப்பட்ட முடிவாக இருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், ஓபிஎஸ் தரப்பு அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது.அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்டது. இதனை எடப்பாடி ஆதரவாளர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதேசமயம், தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது. அதிமுக தலைமையைக் கைப்பற்றும் ஓபிஎஸ்ஸின் முயற்சியில் தேர்தல் ஆணைய அங்கீகாரம் தடைக்கல்லாக விழுந்துள்ளது.நீதிமன்றங்களில் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வருவதால், தனது செல்வாக்கை காட்ட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் திருச்சியில் பிரமாண்டமான மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளார். வரும் ஏப்ரல் 24ஆம் தேதி திருச்சி ஜி.கார்னர் மைதானத்தில் அதிமுக முப்பெருவிழா என்ற பெயரில் ஓபிஎஸ் அணி சார்பில் மாநாடு நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் அதிமுக கொடி மற்றும் கட்சி பெயர், சின்னம் ஆகியவற்றை ஓபிஎஸ் பயன்படுத்தக்கூடாது, மீறினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிமுகவினர் ஏற்கனவே எச்சரித்துள்ளனர். ஆனால் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் திருச்சி மாநாட்டை அதிமுக மாநாடு என்றே நடத்தும் வகையில் ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். “அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அழைக்கிறார்” என்று குறிப்பிட்டு அவரது ஆதரவாளர்கள் பேனர்களை வைத்துள்ளனர்.எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் கட்சி பெயரை பயன்படுத்தக்கூடாது என ஈபிஎஸ் தரப்பினர் எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில் ஓபிஎஸ் தனது மாநாட்டுக்காக அதிமுக பெயர், சின்னம், கொடிகளை பயன்படுத்தி வருவது எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், திருச்சியில் மாநாடு நடைபெறும் பகுதியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வழிநெடுக அதிமுக கொடிகளையும் கட்டி உள்ளனர். ஆனால், அந்தக் கொடியில் ஒரு சிறிய மாற்றத்தைச் செய்துள்ளது அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது. அதிமுகவின் அதிகாரப்பூர்வ கட்சிக் கொடியில் கருப்பு சிவப்பு நிறத்துக்கு நடுவே வெள்ளை நிறத்தில் பேரறிஞர் அண்ணா படம் இடம் பெற்றிருக்கும். கொடியில் மாற்றம் இதனால் தானா? : ஓபிஎஸ் அணியினர் அந்த கொடியில் அண்ணாவின் கைக்கு மேலே பச்சை நிறத்தில் வட்டமாக இரட்டை இலை சின்னத்தை அச்சிட்டு, அந்த கொடியையே மாநாடு நடைபெறும் இடங்களில் கட்டி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி தரப்பு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ள காரணத்தாலேயே கொடியை சற்று மாற்றி ஓபிஎஸ் அணியினர் பயன்படுத்தியுள்ளதாக எடப்பாடி தரப்பினர் விமர்சிக்கின்றனர். ஆனால், இந்தக் கூற்றை ஓபிஎஸ் தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது. அதிமுக கொடியை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்தக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி பேசி இருந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அதிமுக பெயர், கொடியைத் தான் பயன்படுத்துவோம். எந்த கிரிமினல் வழக்கு போட்டாலும் சந்திக்கத் தயார் என்றார்.

கொடியில் மாறுதல் செய்துள்ளது பற்றிய கேள்விக்கு பதிலளித்த வைத்திலிங்கம், “அதிமுக சின்னம் இரட்டை இலை. கட்சிக் கொடியில் இரட்டை இலை உள்ளது. அதில் என்ன தவறு? சட்டச் சிக்கல்களில் இருந்து தப்பிப்பதற்காக இப்படிச் செய்ய நாங்கள் ஒன்றும் குற்றவாளிகள் அல்ல. திருச்சி மாநாட்டிற்கு அதிமுக மாநாடு என்ற பெயரில்தான் தொண்டர்களை அழைப்போம். கொடி, சின்னம் அனைத்தையும் பயன்படுத்துவோம், அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இல்லை என்று தேர்தல் ஆணையம் சொல்லி உள்ளார்களா? இந்த கொடியை, சின்னத்தை பயன்படுத்துவோம் முடிந்தால் வழக்கு போடுங்கள் வழக்கை சந்திக்க தயார். தமிழ்நாட்டில் இதுமட்டுமின்றி இன்னும் பல மாநாடுகளை நடத்துவோம். நாங்கள்தான் ஒரிஜினல் அதிமுக; எடப்பாடியை வேண்டுமானால் இரண்டாவது அதிமுகவாக வைத்துக் கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *