கொரோனா சிகிச்சை ஒத்திகை;களமிறங்கும் சுகாதார பணியாளர்கள்..

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனிடையே இன்றும் நாளையும் நாடு முழுக்க கொரோனா தடுப்பு சிகிச்சை ஒத்திகை நடைபெறுகிறது.இந்தியாவில் கடந்த 2020இல் பரவ தொடங்கிய கொரோனா, அதன் பின்னர் மூன்று அலைகளில் உச்சம் தொட்டது. அதிலும் இரண்டாம் அலையில் வைரஸ் பாதிப்பு மிக மோசமாகவே இருந்தது. ஒரு கட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு லட்சக் கணக்கில் கூட பதிவானது. மருத்துவ படுக்கைகள், ஆக்சிஜனுக்கு கூட தட்டுப்பாடு ஏற்பட்டது. அந்தளவுக்கு வைரஸ் பாதிப்பு மிக மோசமாக இருந்தது.கொரோனா வைரஸ்: கொரோனாவை தடுக்க நாம் தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இந்த நடவடிக்கைகளின் பலனாகவே வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த சில காலமாகவே இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வந்தது. சில நூறு பேர் என்ற அளவிலும் கூட வைரஸ் பாதிப்பு குறைந்தது. இந்தச் சூழலில் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டிலும் கூட அதே நிலை தான். கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் மாநிலத்தில் புதிதாக 369 பேருக்கு கொரோனோ உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாகச் சென்னையில் 113 பேருக்கும், செங்கல்பட்டில் 37 பேருக்கும் திருவள்ளூரில் 19 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல ஆக்டிவ் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் 1,900ஆக அதிகரித்து வருகிறது.ஆலோசனைக் கூட்டம்: இந்தியா முழுக்க கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கடந்த வாரம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கொரோனாவை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு சார்பில் கலந்து கொண்ட சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், கொரோனாவை தடுக்க மாநிலத்தில் எடுக்கப்படும் நடவடிக்கையைக் குறித்துக் கூறினார்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா கேஸ்களை கண்டு அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றாலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் தற்போது ஓமிக்ரான் வகை கொரோனாவால் வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதாகத் தெரிவித்த அவர், பொது இடங்களில் மாஸ்க் போட வேண்டும் என்றும் இணை நோய் உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.கொரோனா ஒத்திகை: கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில், ஏப்ரல் 10, 11ஆம் தேதிகளில் கொரோனா தடுப்பு சிகிச்சை ஒத்திகை நடைபெற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதன்படி இன்றும் நாளையும் நாடு முழுக்க கொரோனா தடுப்பு சிகிச்சை ஒத்திகை நடைபெறுகிறது. இன்று நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகள் சுகாதார மையங்களில் கொரோனா தடுப்பு சிகிச்சை ஒத்திகை நடைபெறுகிறது. மேலும், மாநிலத்திற்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் படுக்கைகள் போதுமான அளவில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *