கலாஷேத்திரா பாலியல் அத்துமீறலை அரசு ஆக்‌ஷன் எடுக்க தவறினால்…?! எச்சரிக்கும் மாதர் சங்கம்

கலாஷேத்திரா பாலியல் அத்துமீறல் விவகாரத்தில் தமிழக அரசு முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என அகில இந்திய மாதர் சங்கம் எச்சரிக்கை

கலாச்ஷேத்ராவில் உள்ள ருக்மணிதேவி நுண்கலை கல்லூரியில் பயின்று வரும் மாணவிகளுக்கு நடந்த பாலியல் அத்துமீறல்களுக்கு எதிராக போராடிவரும் மாணவர்களுக்கு ஆதரவாகவும்  கலாச்ஷேத்ரா  நிர்வாகத்திற்கு எதிராகவும் அகில இந்திய மாதர் சங்கம், இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு, மற்றும் இந்திய மாணவர் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் கூட்டாக சென்னை திருவான்மியூர் சிக்னல் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த அனைத்து இந்திய மாதர் சங்க பொதுச் செயலாளர் ஆர்.ராதிகா. கலாசேத்ராவில் படிக்கும் மாணவிகளுக்கு பேராசிரியர்களால் பாலியல் துன்புறுத்தல் இருந்ததாக பல ஆண்டுகளாக புகார் இருந்துள்ளது.

ஆனால் தற்போது இந்த புகார் எழுந்தவுடன் தேசிய மகளிர் ஆணையம் விசாரணை செய்தது ஆனால் ஏதோ ஒரு நிர்பந்தம் காரணமாக அந்த விசாரணையை திரும்ப பெற்றது. அதனால் தற்போது மீண்டும் விசாரணை தொடங்க வேண்டும். 

அதுமட்டுமில்லாமல் புகார் தெரிவிக்கும் மாணவிகளுக்கு கல்லூரி நிர்வாகம் அச்சுறுத்தல் தருவதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது, மேலும் போராட்டத்தை ஒடுக்குவதற்காக கல்லூரி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது எனவே இந்த போக்குகளை கல்லூரி நிர்வாகம் கைவிட வேண்டும். 

மேலும், பேராசிரியர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் அது மட்டும் இல்லாமல் கல்லூரி நிர்வாகத்திற்கு உடந்தையாக செயல் படும் அனைத்து நிர்வாகிகளையும் கைது செய்ய வேண்டும். 

ஒன்றிய அரசுக்கு கீழ் வரும் கல்வி நிறுவனம் என்பதால் தேசிய மகளிர் ஆணையம் மூன்று மணி நேரம் மட்டுமே விசாரணை மேற்கொண்டது, மேலும் மாணவிகளிடம் விசாரணை மேற்கொள்ளாமல் கல்வி நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டு சென்று விட்டார்கள். எனவே மீண்டும் தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும். 

தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருகிறது எனவே குழந்தைகள் மற்றும் பெண்களை  பாதுகாப்பு குறித்து ஒரு சிறப்பு கூட்டத்துடன் முதலமைச்சர் தலைமையில் நடைபெற வேண்டும் என முதலமைச்சரிடம் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை வைத்துள்ளோம், இந்த விவகாரத்தில் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறோம் தேவைப்பட்டால் இந்த விவகாரம் தொடர்பாகவும் நாங்கள்  எழுத்துப்பூர்வமாக, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வரிடம் மீண்டும் மனு கொடுப்போம். 

இந்த விசாரணையில் ஏதாவது சிறு தவறு நடந்தாலும் தமிழக முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *