அண்ணாமலை மீது அதிரடி குற்றச்சாட்டு!தமிழக பாஜகவில் என்ன நடக்கிறது?அடுத்தடுத்து வெளியேறும் முக்கிய பாஜக தலைவர்கள்-ஊடகவியலாளர் இராகவேந்திரன்.

சிடிஆர் நிர்மல் குமார் கட்சியை விட்டுப் பிரியும் நேரத்தில், செந்தாமரை மீது சேறு பூசிச் செல்லும் செயலால், தன்னை சிறுமைப்படுத்திக் கொண்டிருக்கிறார் என பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாஜகவின் ஐடி விங் மாநில தலைவராகப் பணியாற்றி வந்த சிடிஆர் நிர்மல் குமார், அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து, அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். இது பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கட்சிப்பணியைத்தான் செய்து கொண்டிருக்கிறார் என்று நாங்கள் நினைத்து கொண்டிருந்த நேரத்தில், அவர் குழப்பத்தில் இருந்திருக்கிறார் என கரு நாகராஜன் விமர்சித்துள்ளார்.

பாஜக மாநில தகவல் தொழில்நுட்ப மற்றும் சமூக ஊடக பிரிவு தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார். தனது விலகல் தொடர்பாக நிர்மல் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்துள்ளார். தமிழ்நாடு பாஜக, தலைமை தொண்டர்களையும், கட்சியையும், செருப்பாகப் பயன்படுத்தி, கட்சியைப் பற்றி துளியும் சிந்திக்காது, சொந்தக் கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதைப் போன்ற அல்பத்தனம், எதுவும் இல்லை எனக் கடுமையாகச் சாடியுள்ளார் சிடிஆர் நிர்மல் குமார்.

இந்நிலையில், கட்சியில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்துள்ள சிடிஆர் நிர்மல் குமாருக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, எங்கு சென்றாலும் அவரது பணி சிறக்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அதேசமயம், பாஜகவினர் சிடிஆர் நிர்மல் குமார் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் சிடிஆர் நிர்மல் குமாரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக கரு.நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாஜகவில் இருந்து பிரிந்து சென்றிருக்கும் நிர்மல் குமார் விடுத்திருந்த அறிக்கையைப் படித்தேன். கடந்த ஒன்றை ஆண்டுகளாக கட்சிப் பணியைத்தான் செய்து கொண்டிருக்கிறார் என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், அவர் குழப்பத்தில் இருந்திருக்கிறார் என்பது அவருடைய பிரிவு செய்தியில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. நம் பாஜக போன்ற தேசியத்திற்காகவும் தேச முன்னேற்றத்திற்காகவும் மட்டும் பாடுபடும்.

கட்சியிலே, தனிநபரின் முன்னேற்றத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட கட்சியே முன்னிறுத்தப்படுகிறது. எந்தக் கட்சியில் சார்ந்து இருக்க வேண்டும் என்ற முடிவை எடுக்கும் முழு உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் கட்சியை விட்டுப் பிரியும் நேரத்தில், செந்தாமரை மீது சேறு பூசிச் செல்லும் செயலால், தன்னை சிறுமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். பிரிந்து செல்லும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நன்றாக இருக்கட்டும் என்று நினைக்கும் பெருந்தன்மையைப் பெற்றவர் நம் மாநிலத் தலைவர் அண்ணாமலை.

நம் மாநில தலைவர் அண்ணாமலை பாராட்டுக்களால் பரவசப்படுவதும் இல்லை. தூற்றுபவர்களை கண்டு துக்கப்படுவதும் இல்லை. நம் மாநிலத் தலைவரின் தன்னலமற்ற தியாகமும் ஓய்வறியாத உழைப்பும் மாற்று குறையாத உற்சாகமும், தொண்டர்களிடம் காட்டும் தோழமையும் மக்கள் பிரச்சினைகள் மீது காட்டும் அக்கறையும். விறுவிறுப்பான அணுகுமுறையும், விவேகமான ஆளுமையும் துடிப்பான செயல் திறமும் தமிழ் நாட்டு மக்களை கவர்ந்து இழுத்து இருக்கிறது.

படிப்படியாக வளர்ந்து வரும் பாரதிய ஜனதா கட்சி தற்போது புரவிப் பாய்ச்சலில் இருப்பதை நாட்டு மக்கள் நன்றாக புரித்து கொண்டிருக்கிறார்கள் அதுபோல தன் சொந்த நலனுக்காக அவதூறு பரப்புகிறவர்களையும் மக்கள் அடையாளம் காண்பார்கள்’ என கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார். பாஜகவில் இருந்து அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் அண்ணாமலை மீது குற்றம்சாட்டிவிட்டு வெளியேறி வருவது அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *