தமிழக கர்நாடக எல்லையில்  பதற்றமான சூழ்நிலை…! ஏராளமான போலீசார் குவிப்பு 

marina

மாதேஸ்வரன் மலையில்  நடைபெறும் சிவராத்திரி விழாவை ஒட்டி  மேட்டூரில் இருந்து செல்லும் பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டு வருகிறது. கடந்த 14 ந்தேதி பாலாற்றங்கரையில் கர்நாடக வனத்துறறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டின்  போது காணாமல் போன கோவிந்தபாடியை சேர்ந்த ராஜா(40) என்பவரின் சடலம் நேற்று தமிழக எல்லையில் உள்ள பாலாற்றங்கலையில் மீட்கப்பட்டது. சடலத்தை கைப்பற்றிய ஈரோடு மாவட்டம் பருகூர் போலீசார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செனறனர். 

கர்நாடக வனத்துறையினரின்  துப்பாக்கிச்சூட்டில் தமிழக மீனவர் பலியான சம்பவம் தமிழக கர்நாடாக எல்லைப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பாலாறு வனப்பகுதியில் உள்ள கர்நாடக வனத்துறை சோதனைச்சாவடியில் ஏராளமான கர்நாடக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டின் போது பலியான ராஜாவின் சொந்த கிராமமான காரைக்காட்டிலும், அவரது குடும்பத்தார் தற்போது குடியிருக்கும்  கோவிந்தபாடியிலும் நூற்றுக்கும் மேற்பட்ட  தமிழக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

கொளத்தூர் நான்கு ரோடு, கருங்கல்லூர், பாலவாடி, சத்யாநகர், கோவிந்தபாடி, காரைக்காடு பகுதிகளில் தமிழக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். தமிழக  கிராம மக்கள் கூட்டமாக  பாலாறு பகுதிக்கு செல்கிறார்களா என்பதை  கண்காணிக்க சின்னகாவல் மாரியம்மன் கோவில் அருகே தமிழக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.  இப்பகுதிகளில் நேற்று  இரவு முதலே போலீசார் வாகன ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  

பாலாற்றில் உள்ள கர்நாடக வனத்துறை சோதனைச் சாவடியிலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று நடைபெறும்  மகாசிவராத்திரியை ஒட்டி தமிழகத்திலிருந்து கர்நாடக மாநிலத்தில் உள்ள மாதேஸ்வரன் மலைக் கோவிலுக்கு ஒரு லட்சத்திற்கு அதிகமான பக்தர்கள் சென்று வருவார்கள். அதற்காக  தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் தடையின்றி இயக்கப்பட்டு வருகின்றன. 

ஆனால் மேட்டூர், ஈரோட்டிற்கு வந்து செல்லும் கர்நாடக மாநில அரசு போருந்துகள் இயக்கப்படவில்லை. மாதேஸ்வரன் மலைக்கு  செல்லும் பக்தர்கள் அச்சமின்றி செல்லவும் போக்குவரத்து தடைபடாமல் இருக்கவும் தமிழகம் மற்றும் கர்நாடக போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 

தமிழகத்தில்  இருந்து செல்லும் கார்கள் மோட்டார் சைக்கிள் வழக்கம் போல் கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலைக்கு சென்று வருகின்றன. மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *