ஓசூரில் முதல் முறையாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை…!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தனியாருக்கு சொந்தமான காவேரி மருத்துவமனையில் முதன்முறையாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து சாதனை படைத்துள்ளனர். 

சூளகிரி பகுதியை சேர்ந்த 60 வயது ராஜம்மா என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஹெபடைடிஸ் பி தொடர்பான கல்லீரல் பிரச்சனை அவதிப்பட்டு வந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கடுமையான மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் ஓசூரில் உள்ள தனியாருக்கு சொந்தமான காவிரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனையினர் முடிவு செய்தனர். தனது வயதை காரணம் காட்டி அறுவை சிகிச்சைக்கு மறுத்த ராஜம்மா, அவரது மகன் பால்ராஜ் ஒத்துழைப்பினால் அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டார்.

மருத்துவமனை சார்பில் கல்லீரல் நன்கொடை பெறப்பட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22ஆம் தேதி குடல் மற்றும் கல்லீரல் அறுவை சிகிச்சை மருத்துவர் முரளி ஜெயராமன் தலைமையிலான குழுவினர் வெற்றிகரமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சையில் அவர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி தற்போது வழக்கம் போல அனைத்து பணிகளையும் அவரே செய்து வருவதுடன் கல்லீரலும் நல்ல முறையில் இயங்கி வருகிறது என மருத்துவர்கள் தெரிவித்தனர்

இதுபோன்ற கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பெருநகரங்களில் மட்டுமே மேற்கொள்ளப்படும் நிலையில் ஓசூர் போன்ற நகரங்களிலும் மேற்கொள்ள முடியும் என காவேரி மருத்துவமனை நிரூபித்துள்ளதாகவும்,  கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான உரிமம் தங்களுக்கு கிடைத்தற்கு  மருத்துவமனையில் உள்ள கட்டமைப்பின் வசதி காரணம் என்றும் மருத்துவர் முரளி ஜெயராமன் தெரிவித்தார்.

தான் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு மறுத்த போதும், மருத்துவர்கள் அளித்த உறுதியான ஆலோசனைகள் காரணமாக தனக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடித்து நோய் குணமாக்கப்பட்டது. தான் தற்பொழுது இயல்பு நிலையில் சாதாரணமாக அனைத்து பணிகளையும் மேற்கொள்ள முடிகிறது என்றும் திருமதி ராஜம்மா மற்றும் அவரது மகன் பால்ராஜ் ஆகியோர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *