பிரதமர் மோடியின் படத்தை ஏன் வைக்கவில்லை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 

பிரதமர் மோடியின் படத்தை ஏன் வைக்கவில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுப்பிய கேள்வி தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்து ஆய்வு செய்ய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அப்போது ஜஹீரா பத் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளை ஆய்வு செய்தார். இந்த நிகழ்வில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் காமரெட்டி மாவட்டத்தின் ஆட்சியர் ஜிதேஷ் பாடீல் உடனிருந்தார். 

பின்னர் பேசிய நிதியமைச்சர் கோவிட் பெருந்தொற்று வந்த பின் 2020ஆம் ஆண்டு முதல் இலவச அரிசி கோதுமையை மத்திய அரசே இலவசமாக வழங்கி வருகிறது என குறிப்பிட்டார்.

தொடர்ந்து, ரேஷன் கடைகளில் பிரதமர் மோடியின் படத்தை ஏன் வைக்கவில்லை, சில இடங்களில் அதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியரிடம் தனது அதிருப்தியை தெரிவித்தார். பாஜகவினர் பிரதமர் மோடியின் பேனர் அல்லது படத்தை வைக்க வந்தால், அதை அகற்றாமல் வைத்திருக்க வேண்டும். இதை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்ய வேண்டும் என நிதி அமைச்சர் உத்தரவிட்டார்.

பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ரேஷன் கடைகளில் பிரதமரின் புகைப்படம் வைப்பது தொடர்பான சலசலப்புகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருக்கும் நிலையில், தற்போது நிதி அமைச்சர் நேரடியாக இதை குறிப்பிட்டு பேசியுள்ளது விவாதத்தை கிளப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *