மக்களே உஷார்… குரங்கம்மை நோய்க்கு இந்தியாவில் முதல் பலி!

இந்தியாவில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதல் நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் மக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளது.
உலகம் முழுவதும் 78 நாடுகளில் பரவியுள்ள குரங்கம்மை நோய்க்கு இதுவரை 18 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை கேரளாவில் இருவரும், டெல்லியில் இருவரும் குரங்கு அம்மை நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சமீபத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த சிறுமிக்கு தொற்று இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் முதன் முறையாக குரங்கு அம்மை தொற்று கண்டறியப்பட்ட கேரளாவில், அந்நோயால் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சொந்த ஊர் திரும்பிய 22 வயது இளைஞருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாவக்காடு குரஞ்சியூரைச் சேர்ந்த அந்த இளைஞரின் ரத்த மாதிரிகளை பரிசோதித்ததில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சோர்வு மற்றும் மூளைக்காய்ச்சல் உடன் திருச்சூரில் சிகிச்சை பெற்று வந்த அந்த இளைஞர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இளைஞருக்கு துபாயில் இருந்த போதே குரங்கு அம்மை தொற்று இருந்ததாகவும், அதனை மறைத்து கேரளா வந்த அவர், நோயின் தாக்கம் அதிகரித்ததால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட நபரின் மரணம் தொடர்பாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தலைமையிலான உயர்மட்ட குழு விசாரணையைத் தொடங்கியுள்ளது.