விலைவாசி உயர்வு..!! ராகுல் காந்தி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்..!!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கி ஆகஸ்ட் 12-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் தடையை மீறி டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பணவீக்கம், ஜிஎஸ்டி விலைவாசி உயர்வுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று உள்ளனர். நேற்று நாடாளுமன்ற இரு சபைகளிலும் எதிர்க்கட்சிகளும் பல்வேறு பிரச்சனைகளை எழுப்பினர். இந்நிலையில் நாடாளுமன்றத்தின் 2வது நாள் கூட்டம் இன்று நடைபெறும் நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை அருகே மத்திய பாஜக அரசுக்கு எதிர்த்து இந்த போராட்டம் நடைபெறுகிறது.
நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட வார்த்தைகளை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்து உள்ளது. மேலும் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தவும் தடை தடை விதித்தது. இதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில் மத்திய அரசின் தடையை மீறி இன்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் இந்தப் போராட்டத்தை நடத்தினர்.
இதனிடையே ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் சபை நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.