தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு 4 மாதம் சிறை தண்டனை – உச்சநீதிமன்றம்

தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 4 மாத சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தியாவில் கடன் வாங்கி அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடினார் விஜய் மல்லையா.
இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் தொகையை திரும்பச் செலுத்தாமல், பணப்பரிவர்த்தனையில் ஈடுபடக் கூடாது என தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அந்த உத்தரவை மீறி, 40 மில்லியன் அமெரிக்க டாலர் பரிவர்த்தனை செய்தது தொடர்பாக, விஜய் மல்லையா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதில் கடந்த 2014 ஆம் ஆண்டில், விஜய் மல்லையாவை குற்றவாளி என உறுதி செய்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் விஜய் மல்லையாவுக்கு 4 மாத சிறைத் தண்டனை மற்றும் ரூ.2,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
முன்னதாக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி விஜய் மல்லையா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
விஜய் மல்லையா மாற்றிய அனைத்து பணமும் 8 சதவீத வட்டியுடன் கடன் மீட்பு அதிகாரிக்கு திருப்பித் தரப்படும் என்று நீதிமன்றம் கூறி உள்ளது. அபராதத்தை சரியான நேரத்தில் டெபாசிட் செய்யாவிட்டால், மல்லையா மேலும் இரண்டு மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் கூறியுள்ளது.