டூ-வீலரல போறிங்களா…. அப்போ இது இல்லனா இனிமேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
நாளை முதல் இரு சக்கர வாகனங்களில் பின்னர் அமர்ந்து பயணிப்போரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று சென்னை போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது.
இந்தாண்டு ஜனவரி 1 முதல் கடந்த 15-ம் தேதி வரையில் இருசக்கர வாகனத்தில் சென்று ஹெல்மெட் அணியாமல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 98 பேர். அதில் 841 பேர் படுகாயம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் ஹெல்மெட் அணியாமல் பயணித்ததில் 80 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் 18 பின்னிருக்கை பயணிகள் உயிரிழந்தனர் மற்றும் 714 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் 127 பின்னிருக்கை பயணிகள் காயமடைந்துள்ளனர்.இதனால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில்,சென்னையில் நாளை (மே 23 ஆம் தேதி) முதல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.அதன்படி, சென்னையில் நாளை முதல் ஹெல்மெட் அணியாதவர்களை பிடிக்க 312 இடங்களில் அதிரடி சோதனை நடத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் ஒட்டிச்செல்பவர்களும்,பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணியாமல் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக,இருசக்கர வாகன விபத்துகளைக் கட்டுப்படுத்த,குறைக்க நாளை முதல் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கை நபரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்றும் வாகன ஓட்டிகள் விதிகளை கடைபிடிப்பதை உறுதி செய்ய அதிரடி சோதனை நடத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது எனவும் குறிப்பிடப்படுகிறது.