போலி என்கவுன்ட்டர் – 10 காவல் துறையினர் மீது கொலை வழக்கு பதிவு !

2019-ம் ஆண்டு பெண் மருத்துவரை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து, எரித்து கொல்லப்பட்ட வழக்கில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது போலியானது என உச்ச நீதிமன்றத்தினால் அமைக்கப்பட்ட நீதி விசாரணை ஆணையம் அறிக்கை அளித்துள்ளது. மேலும் 10 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2019-ம் ஆண்டு நவம்பர் 28-ம் தேதி கால்நடை பெண் மருத்துவர் கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொல்லப்பட்டார். பின்னர் அவரது உடலை ஹைதராபாத் புறநகரில் வீசிச் சென்றனர். பின்னர் சந்தேகத்தின் அடிப்படையில் சென்னகேசவுலு, ஜொள்ளு சிவா, ஜொள்ளு நவீன் மற்றும் முகமது ஆரிப் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். டிசம்பர் 6-ம் தேதியன்று, குற்றம் எப்படி நிகழ்த்தப்பட்டது என்பதை செய்து காட்டுவதற்காக, சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு குற்றவாளிகளை அழைத்துச் சென்றபோது, காவலில் இருந்து தப்பிக்க முயன்றதால், நான்கு பேரையும் ரங்கா ரெட்டி மாவட்டத்திலுள்ள சட்டன்பள்ளியில் சுட்டுக் கொன்றதாக போலீஸார் கூறினர்.

விசாரணை குழு அமைத்தல்
இச்சம்பவத்தினை தொடர்ந்து டிசம்பர் 12, 2019 அன்று உச்ச நீதிமன்றம், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வி.எஸ்.சிர்புர்கர், முன்னாள் மத்திய புலனாய்வுத்துறை (சிபிஐ) தலைவர் டி.ஆர்.கார்த்திகேயன் மற்றும் மும்பை முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.பி.சொந்தூர்பல்டோடா ஆகியோர் அடங்கிய விசாரணைக் குழுவை அமைத்தது.
நீதிவிசாரணை ஆணையத்தின் அறிக்கை
`திஷா என்கவுன்ட்டர்’ என்ற அந்த வழக்கில், ஆணையம் ஆகஸ்ட் 21, 2021 முதல் நவம்பர் 15, 2021 வரை 47 நாள்கள் விசாரணை நடத்தி, 57 சாட்சிகளை விசாரித்தது. பின்னர் இக்குழு தனது அறிக்கையினை இன்று சமர்ப்பித்தது. இதில் “குற்றவாளிகள் கொல்லப்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே காவல் துறையினர் என்கவுண்டர் செய்துள்ளனர். என்கவுண்டர் செய்யப்பட்ட நான்கு பேரில் மூவர் 18 வயது நிரம்பாத மைனர்கள். ஆனால் காவல் துறையினர் அவர்களுக்கு 20 வயது என குறிப்பிட்டுள்ளது. எனவே, 2019-ம் ஆண்டு பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் போலீசார் நடத்திய என்கவுன்ட்டர் போலியானது என்றும், 10 காவல் துறையினரை கொலை குற்றவாளிகளாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும்” என்றும் நீதி விசாரணை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.