#Breaking பேரறிவாளனை விடுவிக்கிறோம்… மத்திய அரசை வெளுத்து வாங்கிய உச்ச நீதிமன்றம்!
மேற்கொண்டு வாதிட ஒன்றுமில்லை என மத்திய அரசு சொன்னால் பேரறிவாளனை விடுவித்து உத்தரவிடுகிறோம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், பி.ஆர். கவாய் அடங்கிய அமர்வு, கடந்த மார்ச் 9ஆம் தேதி பிணை வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில், தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், பி.ஆர். கவாய் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மீண்டும் ஆளுநருக்கு இருக்கும் அதிகாரம் குறித்து மத்திய அரசு வாதங்களை முன்வைத்தது. தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பார். அதனை குடியரசுத்தலைவர் நிராகரிப்பது, கருணை காட்டுவது, அல்லது ஆளுநர் முடிவுக்கே விடுவது என மூன்று விஷயங்கள் உள்ளன, இதில் ஏதாவது ஒன்றை குடியரசுத்தலைவர் தேர்ந்தெடுப்பது தான் சுமூகமான வாய்ப்பு என மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இதற்கு பேரறிவாளன் மற்றும் தமிழக அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க ஆளுநர் மட்டுமே அதிகாரம் படைத்தவர் என்றால் தேவையில்லாமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைப்பது ஏன் என கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அமைச்சரவை எடுத்த முடிவை ஏற்றுக்கொள்வது தான் ஆளுநருக்கு உள்ள வாய்ப்பு என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த விடுதலைக்கு விவகாரத்தில் மட்டுமல்ல, பல விவகாரங்களில் இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்துள்ளோம். அதில் என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுத்துள்ளீர்கள் என மத்திய அரசுக்கு கேள்விகளை முன்வைத்தனர்.
மேலும் இந்த விவகாரத்திற்கு மேற்கொண்டு வாதிட ஒன்றுமில்லை என மத்திய அரசு சொன்னால் பேரறிவாளனை விடுவிப்பதற்கான உத்தரவை வெளியிட்டு விடுவோம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.