அனுமதி தர முடியாது… கறார் காட்டிய வெங்கையா நாயுடு; கொதித்தெழுந்த திமுக எம்.பி.க்கள்!

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திரும்பி அனுப்பியதை கண்டித்து, திமுக எம்.பி.க்கள் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான சட்ட முன்வடிவு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13ஆம் தேதியன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறுவதற்காக தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.

இறுதி வரை இந்த சட்ட முன்வடிவு ஒன்றிய அரசுக்கு அனுப்பப்படாத நிலையில், அந்த சட்ட முன்வடிவு தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டது. இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

இந்நிலையில், நேற்று மாநிலங்களவை செயலரிடம் திமுக எம்.பி. திருச்சி சிவா இந்த ஒத்திவைப்பு நோட்டீஸை வழங்கினார். மாநிலங்களவை அலுவல் நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
இன்று காலை மாநிலங்களவையில் பூஜ்ஜிய நேரம் தொடங்கியவுடன், அதை ஒத்திவைத்துவிட்டு நீட் விவகாரம் குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்று மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவிடம் திமுக எம்.பி.க்கள் கோரிக்கை வைத்தனர்.

திமுக உறுப்பினர்கள் திருச்சி சிவா, வில்சன், எம்.சண்முகம், ஆர்.எஸ்.பாரதி ஆகியோரின் கோரிக்கையை வெங்கய்ய நாயுடு நிராகரித்தார். இதனையடுத்து திமுக எம்.பி.க்கள் தொடர்ச்சியாக விவாதத்துக்கு அனுமதி கோரி முழங்க வெங்கய்ய நாயுடுவோ, ”பூஜ்ஜிய நேரத்தை தடுக்க வேண்டாம். அலுவல்கள் வழக்கம்போல் நடக்கட்டும். 11.30 மணிக்கு மேலோ அல்லது 12.30 மணிக்கோ இதுபற்றி விவாதிக்கலாம்” என்றார்.

ஆனால், அவையில் கூச்சல், குழப்பம் ஓயவில்லை. ”நீங்கள் என்ன செய்தாலும் அனுமதியில்லை” என்று வெங்கய்ய நாயுடு திட்டவட்டமாகக் கூறிவிட்டு வழக்கம்போல் பட்டியலிட்ட அலுவல்களை நடத்தினார். இதனால் அதிருப்தியடைந்த திமுக எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…