பணத்தேவைக்காக விற்க வரலாறு கைசரக்கல்ல .. அது தேசத்தின் பொக்கிஷம் : பிரசார் பாரதியின் முடிவுக்கு எம்பி கடும் கண்டனம்

அரசியல் நிர்ணய சபை விவாதங்கள் ,இந்திய வரலாற்றின் மகத்தான சாட்சியங்கள் உள்ளிட்ட வரலாற்று ஆவணங்களை ஏலம் விடப் போவதாக பிரசார் பாரதி அமைப்பு முடிவெடுத்துள்ளது .இதற்கு மதுரை எம்.பியும் , வரலாற்று எழுத்தாளருமான சு.வெங்கடேஷன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார் . மேலும் , பணத்தேவைக்காக விற்க வரலாறு கைசரக்கல்ல அது தேசத்தின் பொக்கிஷம் என கடுமையாக ஒன்றிய அரசினை தாக்கியும் பதிவிட்டுள்ளார் .

” தன்னிடம் உள்ள வரலாற்று ஆவணங்களை ஏலம் விடப் போவதாக பிரசார் பாரதி அமைப்பு ( அக் : 8 ) முடிவெடுத்துள்ளது .இந்த உத்தரவினை பிரசார் பாரதி அமைப்பு கைவிடுமாறு ஒன்றிய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் .இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளவை :

இவர்கள் ஏலம் விடப் போகிற ஆவணங்களில் அரசியல் நிர்ணய சபை விவாதங்கள் உள்ளிட்ட இந்திய வரலாற்றின் மகத்தான சாட்சியங்கள் அடங்கும் . நிகழ்கால அரசியல் தேவைகளுக்காக வரலாற்றினை சிதைக்க முயலும் எந்த ஒரு முயற்சியையும் அனுமதிக்க முடியாது .

இந்திய வரலாற்றின் நிகழ்வுகள் அதன் காலம் , சூழல் சாராது தவறாகப் பயன்படுத்தப்பட்டால் அது தேசத்தின் அரசியலை , அமைதியை , சமாதானத்தை எதிர்மறையாக பாதிக்க கூடும் .

ஆகவே கார்ப்பரேட் ஊடகங்கள் கைகளில் இதன் உரிமைகள் செல்வது அறிவார்ந்த செயலாக இருக்காது . இந்த சேமிப்பு ஆவணங்களுக்கு சந்தையில் நல்ல விலையும் , தேவையும் இருப்பதால் அதை ” பணமாக்க ” போவதாக பிரசார் பாரதி அறிவித்துள்ளது . இப்படித் தரப்படும் உரிமைகளில் ” தனி உரிமைகளும் ” ( Exclusive rights ) அடக்கம் . இது அரசின் நிதிப் பற்றாக்குறையை ஈடு கட்டுவதற்கான பணம் பண்ணும் பிரச்சினை அல்ல . சமூகத்தின் மீது நீண்ட கால விளைவுகளை உருவாக்குகிற பிரச்சினை . கண்களில் படுவதையெல்லாம் விற்க முனையக் கூடாது . கண்ணும் கருத்துமாய் பாதுகாக்கப்பட்ட வேண்டியது வரலாறு . ஆகவே பிரசார் பாரதியின் முடிவை தடுத்து நிறுத்துமாறு வேண்டுகிறேன் என குறிப்பிட்டு உள்ளார் .

ஒன்றிய அரசு நிதிபற்றாக்குறையினை சமாளிக்க தொடர்ச்சியாக பல்வேறு பொதுத்துறை பங்குகளை விற்று வருகிறது .சமீபத்தில் கூட ஏர்-இந்தியாவினை பொது ஏலத்தில் டாடா நிறுவனம் தன் வசமாக்கியது . அதன் தொடர்ச்சியாக வெளியாகியுள்ள பிரசார் பாரதி அமைப்பின் முடிவு சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாகியுள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *