மனசு ஐபிஎல் தொடரில் இருந்தே இன்னும் வரல .. அதற்குள் உலகக்கோப்பையா ? முதல் தகுதிச்சுற்றுப் போட்டி இன்று !

ஐபிஎல் தொடரின் மயக்கத்தில் இருந்தே இன்னும் வெளிவராத நிலையில் , இன்று டி20 உலகக்கோப்பை போட்டி தொடங்குவதால் கிரிக்கெட் ரசிகர்கள் அதீத மகிழ்ச்சியில் உள்ளனர் .
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று (அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி) தொடங்க உள்ளது. இந்த தொடரின் இறுதிப்போட்டி நவம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரை இந்தியாவின் பிசிசிஐ தான் நடத்துகிறது .இந்தியாவில் நிலவும் கொரோனா தொற்றால் இத்தொடர் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மாற்றப்பட்டது .ஐபிஎல் தொடரினை வெற்றிக்கரமாக நடத்தி முடித்துள்ள நிலையில் இத்தொடரையும் வீரர்கள் மற்றும் அணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நடத்தப்பட உள்ளன .
தகுதிச்சுற்று ஆட்டங்கள் :
இத்தொடரில் மொத்தம் 16 அணிகள் விளையாட உள்ளன . தரவரிசை பட்டியலின் அடிப்படையில் 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் மீதமுள்ள 4 இடங்களை பிடிக்க தகுதிச்சுற்றுப்போட்டியில் இலங்கை , வங்காளதேசம் உட்பட 8 அணிகள் மோதுகின்றன . முதற்கட்டமாக தகுதிச்சுற்றுப்போட்டிகள் இன்று தொடங்குகிறது . 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில் , ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும் . தகுதிச்சுற்றின் குரூப் ஏ பிரிவில் – அயர்லாந்து , நெதர்லாந்து , நம்பியா . ஸ்ரீலங்கா அணிகள் இடம்பெற்றுள்ளன .இதைப்போல் குரூப் பி பிரிவில் – வங்காளதேசம் , ஓமன்,ஸ்காட்லாந்து , பப்பு நியூ கெய்னா அணிகள் இடம்பெற்றுள்ளன .இன்று நடைப்பெறும் இரு தகுதிச்சுற்று ஆட்டங்களில் ஓமன் -பப்பு நியூ கெய்னா அணியும் , மற்றொரு ஆட்டத்தில் வங்காளதேசம் – ஸ்காட்லாந்து அணிகளும் மோத உள்ளன .

சூப்பர் 12 ஆட்டங்கள் :
தகுதிப்போட்டியில் வெற்றி பெறும் நான்கு அணிகளுடன் சேர்த்து மொத்தம் 12 அணிகள் சூப்பர் 12 சுற்றில் களம் காண உள்ளது . இதில் குரூப் ஏ பிரிவில் , ஆஸ்திரேலியா , தென்னாப்பிரிக்கா , இங்கிலாந்து , மேற்கிந்தீய தீவுகள் அணிகள் இடம்பெற்றுள்ளன .இதைப்போல் குரூப் பி பிரிவில் இந்தியா , பாகிஸ்தான் , நியூசிலாந்து , ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன .சூப்பர் 12 சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை ஒவ்வொரு பிரிவிலும் பிடிக்கும் அணி அரையிறுதி போட்டிக்கு முன்னேறும்
கேப்டனாக விராட் கோலியின் இறுதி டி20 :
உலகக்கோப்பை டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் அனைவரும் தற்போது தான் ஐபிஎல் தொடரில் விளையாடி வந்துள்ளதால் , அவர்களுக்கு நடப்பு உலகக்கோப்பை தொடர் சற்று எளிதாகவே இருக்கும் என கிரிக்கெட் வல்லூனர்கள் கருதுகின்றனர் .இதில் சூப்பர் 12 சுற்றின் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை வருகிற ஞாயிற்றுக்கிழமை அக்-24 ஆம் தேதி எதிர்க்கொள்ள உள்ளது . இந்திய அணியின் ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு உள்ளது . விராட் கோலி உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னரே தான் கேப்டனாக பங்கேற்கும் இறுதி டி20 தொடர் எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது .