ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜை : கேரள முதல்வர் பினராயி முக்கிய அறிவிப்பு !

உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளை முன்னிட்டு தினசரி 25 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
தென் இந்தியாவில் கேரளாவினை ஒப்பிடுகையில் மற்ற மாநிலங்களில் , குறைந்த அளவிலேயே தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது . அதனால் , மற்ற மாநிலங்களை விட கேரளாவில் கொரோனா கட்டுப்பாடு அதிகமாகவே உள்ளது .இந்நிலையில் , பக்தர்கள் அதிகம் வருகை தரும் , ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16ஆம் தேதி மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை தொடங்குவதாக கேரள அரசு அறிவித்துள்ளது
கடந்த இரு ஆண்டுகளாக மகரவிளக்கு பூஜையின் போது கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தினசரி குறைந்த அளவிலான பக்தர்களே சபரிமலை ஐயப்பனை காண அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், இந்த ஆண்டு பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது .இக்கூட்டத்தில் , தேவஸம் போர்ட் , வனம் , சுகாதாரம் ,நீர்வளம் துறைச்சார்ந்த அமைச்சர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர் .
பக்தர்கள் தரிசனத்திற்குப் பிறகு சன்னிதானத்தில் தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்
கூட்டத்தின் முடிவில் நாளொன்றுக்கு 25 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதிக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டது. ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். சபரிமலைக்கு வரும் பக்தர்கள் இரு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் அல்லது கொரோனா நெகடிவ் சான்றிதழ் உடன் வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதே போல்,பக்தர்கள் எருமேலி வழியாக வனப்பாதையில் அல்லது புல்மேடு வழியாக சன்னிதானம் செல்லும் வழியில் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.பக்தர்களுக்கு பம்பா ஆற்றில் நீராட இந்தாண்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.