வந்துட்டோம்னு சொல்லு .. திரும்ப வந்துட்டோம்னு : என்ன தான் பிரச்சினை..மெளனம் காக்கும் பேஸ்புக்

ஏறத்தாழ சுமார் 11 மணி நேர போராட்டத்திற்கு பின் மீண்டும் 100% எத்தகைய சிரமமும் இன்றி செயல்பட தொடங்கியுள்ளன உலகில் பல மில்லியன் மக்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளங்கள் ஆன பேஸ்புக் , வாட்ஸ் அப் , மற்றும் இன்ஸ்டாகிராம் .
நேற்று இரவு 9:30 மணியளவில் அனைவரும் செய்வதறியாது விழிப்பிதுங்கி கொண்டிருந்தார்கள் . இன்னும் சொல்லப்போனால் உலகம் தன் இயக்கத்தை நிறுத்திவிட்டதாகவே கருத தொடங்கினார்கள் .இணையம் இல்லாத வாழ்வை யோசித்தே பார்க்க முடியாத காலக்கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் உலகளவில் , பெரும்பாலனோர் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்கள் ஆன பேஸ்புக் , வாட்ஸ் அப் , இன்ஸ்டாகிராம் செயலிகள் ஒரே நேரத்தில் முடங்கியது .
அதே வேளையில் ” எனக்கு ராஜாவா நான் “ என உயிர்ப்புடன் இருந்தது மற்றொரு சமூக வலைத்தளமான டிவிட்டர் தளம் . டிவிட்டர் மூலமாகவே அனைவருக்கும் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் முடங்கியது பரவத்தொடங்கின .
பிரச்சினை தொடங்கிய சில மணி நேரத்திலேயே , “வாட்ஸ் ஆப் பயன்பாட்டில் உள்ள பிரச்னையை சரி செய்ய முயன்று வருகிறோம் என வாட்ஸ் ஆப் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தது. தொடர் முயற்சிக்குப் பின் , இன்று அதிகாலை 4:47 மணியளவில், வாட்ஸ் அப் நிறுவனம் பயனாளர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியது. செயலியை பழையபடி இயக்க வைக்க தேவையான முயற்சிகளை மெதுவாகவும், கவனமாகவும் மேற்கொண்டு வருவதாகவும் டிவிட்டர் வாயிலாக தெரிவித்தது.
பயனாளர்களின் பொறுமைக்கு நன்றியையும் வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்தது. இந்நிலையில் அதிகாலை முதல் பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகள் மீண்டும் செயல்பட தொடங்கின.இதனிடையே , மீண்டும் இன்று காலை 8 மணியளவில் டிவிட் ஒன்றினை தட்டியுள்ளது வாட்ஸ் அப் நிறுவனம் . அதில் , நாங்க திரும்ப வந்துட்டோம் , 100 % சதவீத செயல்பாட்டுடன் என தெரிவித்துள்ளது. மேலும் , உலகளவில் முடக்கத்தின் போது ஆதரவினையும் , பொறுமையையும் கடைப்பிடித்த அனைத்து பயனாளர்களுக்கும் தன் நன்றியினை தெரிவித்து உள்ளது .
என்ன தான் பிரச்சினை : வாய்த்திறக்காத பேஸ்புக்
செயலிழப்பு தொடங்கிய உடனேயே, பேஸ்புக் பயனர்களுக்கு அதன் செயலிகளை அணுகுவதில் சிக்கல் இருப்பதை பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் நிறுவனம் ஒப்புக் கொண்டது, ஆனால் பிரச்சனையின் தன்மை பற்றி எந்த விவரங்களையும் வழங்கவில்லை அல்லது எத்தனை பயனர்கள் செயலிழப்பால் பாதிக்கப்பட்டார்கள் என்றும் தன் தரப்பில் கூறவில்லை.
சில பத்திரிகைகளுக்கு பெயரிட மறுத்த பல ஃபேஸ்புக் ஊழியர்கள், இணைய டொமைனில் உள்ள உள் ரூட்டிங் தவறு காரணமாக இந்த செயலிழப்பு ஏற்பட்டதாக நம்புவதாகக் கூறினர்.விளம்பர அளவீட்டு நிறுவனமான ஸ்டாண்டர்ட் மீடியா இன்டெக்ஸின் மதிப்பீடுகளின்படி, உலகின் இரண்டாவது பெரிய டிஜிட்டல் விளம்பர தளமான பேஸ்புக், செயலிழப்பின் போது அமெரிக்க விளம்பர வருவாயில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் $ 545,000 இழந்துள்ளதாக தெரிவித்து உள்ளது .