ஊரக உள்ளாட்சி தேர்தலில் 3,346 பேர் போட்டியின்றி தேர்வு

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலும் , 28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தலும் வரும் அக்டோபர் 6,9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடக்கிறது.இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ம் தேதி தொடங்கி 22-ம் தேதி முடிவடைந்தது.
அதில் மொத்தம் 27,791 பதவிகளுக்கு 1 லட்சத்து 698 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர். 23-ம் தேதி நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையின் போது 1,246 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. பின் 15,287 வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை திரும்பப் பெற்று கொண்டனர்.இதையடுத்து, தேர்தல் ஆணையம் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கான சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இந்நிலையில், தேர்தல் நடக்கும் மாவட்டங்களில் இருந்து 3,346 பதவிகளுக்கான வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.மேலும், தமிழ் நாடு முழுவதும் 4 கிராம ஊராட்சி தலைவர், 25 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
இதையடுத்து, தற்போது 24,416 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. தேர்தல் களத்தில் 80,819 வேட்பாளர்கள் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.திமுக, அதிமுக, மநீம, பாமக ஆகிய கட்சி தலைவர்கள் தேர்தலுக்கான பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.