ஓபிஎஸ் கைது… என்ன காரணம் தெரியுமா?

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட மாணவர்களின் நலனுக்காக, முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில், விழுப்புரத்தில் டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. அதற்கு, துணைவேந்தர் நியமனமும் நடைபெற்றது. ஆனால், அதற்கான நிதி ஒதுக்கீடு, கட்டுமானம் உள்ளிட்ட பணிகள் நடைபெறவில்லை எனக் கூறி, திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்க முடிவு செய்தது.
இதற்கு அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த விவகாரம், நடைபெற்று வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலும் எழுந்தது. ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப்பேரவையில் அதிமுக வலியுறுத்தியது.
ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதில் எவ்விதக் காழ்ப்புணர்ச்சியும் இல்லை எனவும், தற்போதைக்கு ஜெயலலிதா பல்கலைக்கழகம் தேவையில்லை என்பதால், அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் எனவும், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று (ஆக. 31) சட்டப்பேரவை கூடியதும், 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டத்தை (திருத்தம் மற்றும் நீக்கம்) பொன்முடி அறிமுகம் செய்தார். இதில், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.
இம்மசோதாவைக் கடுமையாக எதிர்க்கிறோம் என, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். இம்மசோதாவை ஆய்வுக்கு எடுக்கும்போது விரிவாகப் பேசலாம், வாய்ப்பு தருகிறேன் என, சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். ஆனால், இம்மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக, சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்ததையடுத்து, அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து, ஓபிஎஸ் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கலைவாணர் அரங்கத்துக்கு முன்பாக இருந்த சாலையில் அமர்ந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, கே.பி.முனுசாமி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். ஜெயலலிதா பல்கலைக்கழகத்தைத் தொடர்ந்து விழுப்புரத்திலேயே இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், திமுக அரசைக் கண்டித்தும் இந்தச் சாலை மறியலில் முழக்கங்கள் எழுப்பினர். பின்னர், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினரைக் கைது செய்து, போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.
அதிமுகவினர் சாலை மறியலால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டது.
இதனிடையே, இதே கோரிக்கையை முன்வைத்து விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகமும் கைது செய்யப்பட்டார்.