தீரன் சின்னமலை சிலைக்கு முதலமைச்சர் மரியாதை

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே பிறந்தவர் தீரன் சின்னமலை. ஆங்கிலேயருக்கு எதிராக சொந்தமாக படை திரட்டி அவர் போராட்டத்தை முன்னெடுத்தார். கடந்த 1805ம் ஆண்டு ஆடி 18ம் தேதி சங்ககிரி கோட்டையில் தீரன் சின்னமலை ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டார். இதை அடுத்து ஒவ்வொரு ஆண்டும் ஆடி பெருக்கு அன்று அவரது நினைவு தினமானது அனுசரிக்கப்படுகிறது.
அதன் படி, இன்று அவரின் 216 ஆம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவு தினத்தை போற்றும் வகையில் சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுவது வழக்கம்.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், ராஜகண்ணப்பன், எ.வ.வேலு, செந்தில்பாலாஜி, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பொதுப்பணித்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் கிண்டியில் உள்ள வீரர் தீரன் சின்னமலையின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஓடாநிலையில் கோட்டை அமைத்துப் போரிட்ட விடுதலை வீரர், சங்ககிரிக் கோட்டையில் ஆடிப்பெருக்கு நாளில் வீரமரணம் அடைந்த தீரன் சின்னமலையின் 216-ஆம் நினைவுநாளான இன்று, சென்னையில் முத்தமிழறிஞர் கலைஞர் நிறுவிய தீரன் சின்னமலையின் திருவுருவச்சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன்” எனத் தெரிவித்துள்ளார்.