தமிழ் வளர்ச்சிக்காக போராடியவர்களுக்குப் புதிய விருது… முதலமைச்சர் அறிவிப்பு

தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றது முதல் பல அதிரடி திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த வகையில், தமிழகத்திற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த ‘தகைசால் விருது’ என்ற புதிய விருதை அறிமுகப்படுத்தி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து, தமிழக அரசு சார்பில் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘தமிழகத்திற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் விதமாக, ‘தகைசால் தமிழர்’ என்ற பெயரில் புதிய விருதை உருவாக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விருதிற்கான விருதாளரைத் தேர்வு செய்ய முதல்வர் தலைமையில், தொழில்துறை, தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் தலைமை செயலரை உள்ளடக்கிய ஒரு குழுவை அமைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்படும் ‘தகைசால் தமிழர்’ விருது பெறும் விருதாளருக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், சுதந்திரதின விழாவின்போது, முதல்வரால் வழங்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.