லாட்டரியை கொண்டுவரவிட்டால் மகிழ்ச்சிதான் – எடப்பாடி பழனிசாமி!

தமிழக அரசு மீண்டும் மாநிலத்தில் லாட்டரி முறையை கொண்டுவரவிட்டால் மகிழ்ச்சிதான் என தெரிவித்துள்ளார் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி.
மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தமிழகத்தில் மீண்டும் லாட்டரி சீட்டு முறையை கொண்டுவர முயல்வதாகவும், அவ்வாறு லாட்டரி முறை மீண்டும் கொண்டுவரப்பட்டால் தமிழகம் சுடுகாடாகிவிடும். அரசு இம்மாதிரியான முயற்சிகளில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது என சில தினங்களுக்கு முன்னாள் அறிக்கை விடுத்திருந்தார் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.
பழனிசாமியின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த நிதியமைச்சர் “தமிழ்நாடு அரசு ஆலோசனைகளிலோ, ஆய்வுக் கூட்டங்களிலோ ஒருமுறை கூட லாட்டரி பற்றிய பேச்சே இதுவரை எழவில்லை என்பதை எதிர்கட்சித் தலைவருக்கு ஆணித்தரமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைய எதிர்கட்சித் தலைவர் தனது மோசமான ஆட்சியால் நெருக்கடி மிகுந்த நிதிநிலைமையை விட்டுச் சென்றிருந்தாலும் சிதிலமடைந்த நிதி நிலைமையைச் சரிசெய்யும் கடும் நெருக்கடி மிகுந்த சூழலை இந்த அரசுக்கு ஏற்படுத்தி விட்டுச் சென்றிருந்தாலும் – மாநில நிதி ஆதாரத்தைப் பெருக்கும் வழிகளில் லாட்டரி பற்றிய சிந்தனையே இந்த அரசுக்கு இல்லை.
நிதிப் பேரழிவில் மாநிலத்தை அ.தி.மு.க. விட்டுச் சென்றிருந்தாலும் அதை சரிசெய்ய நாங்கள் சிந்திக்கும் சூழலில் கூட- லாட்டரி எங்கள் சிந்தனை வட்டத்திற்குள்ளேயே இல்லை என்பதை எடப்பாடி பழனிசாமி அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
கற்பனையான கதைகளை அறிக்கையாக வெளியிட்டு திராவிட முன்னேற்றக் கழக அரசு மக்களுக்குச் செய்து கொண்டிருக்கும் நற்பணிகளைத் திசை திருப்பும் வேலையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஈடுபடுவது அவர் வகிக்கும் பொறுப்பிற்கு அழகல்ல” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் லாட்டரி சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர முயல்வதாக எங்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே நாங்கள் அறிக்கை வெளியிட்டிருந்தோம். நிதியமைச்சர் குறிப்பிடுவதை போல லாட்டரியை கொண்டுவரவிட்டால் மகிழ்ச்சிதான் என தெரிவித்துள்ளார்.