விதிமுறைகளை மீறி போராட்டம் ; சி.வி சண்முகம் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு!

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக அரசு பல்வேறு ஊரடங்கு விதிமுறைகளையும் – கட்டுப்பாடுகளையும் விதித்துள்ள நிலையில், அரசின் கட்டுப்பாடுகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி சண்முகம் உள்ளிட்ட 3500 அதிமுகவினர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக அரசின் ஆட்சிக்காலத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பெயரில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு எவ்வித போதிய நிதி ஆதாரம் உள்ளிட்டவை ஒதுக்கப்படவில்லை. எனவே இப்பல்கலைக்கழகத்தினை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்த நிலையில், ஜெயலலிதாவின் பெயரிலான பல்கலைக் கழகத்தினை திமுக அரசு முடக்க முயல்வதாக கூறி, நேற்று விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், அரசின் கட்டுப்பாடுகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்தினால் சி.வி சண்முகம் உள்ளிட்ட சுமார் 3500 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது காவல்துறை.