முதல்வர் பொறுப்பிலிருந்து விலகிய எடியூரப்பா – பரபர பின்னணி!

கர்நாடக மாநில முதல்வராக இருந்த எடியூரப்பாவை, முதல்வர் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு வேறு ஒருவரை அப்பதவியில் அமரவைக்க பாஜக மேலிடம் முயல்வதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருந்த சூழலில், இன்று தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் எடியூரப்பா.
வயது முதிர்வின் காரணமாகவும், எடியூரப்பாவின் மகன் ஆட்சியில் தலையிடுகிற காரணத்தினாலும் பாஜக மேலிடம் எடியூரப்பாவை மாற்றி விட்டு வேறு ஒருவரை கர்நாடக முதல்வராக நியமிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்த சூழலில், எடியூரப்பாவை முதல்வர் பதவியிலிருந்து நீக்க கூடாதென லிங்காயத்து, ஜெகத்குரு முருகராஜேந்திர மடம், ரம்பாபுரி பீடம் உள்ளிட்ட பல்வேறு மடங்கள் வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில், கர்நாடக மாநில முதல்வர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் எடியூரப்பா. இது குறித்து பாஜக வட்டாரங்களில் பேசிய போது, சித்தாந்த வலுவின் மேல் கட்டப்பட்டுள்ள பாஜகவில் தலைமை பொறுப்புகளுக்கு எவர் வேண்டுமானாலும் வரலாம், போகலாம். ஆனால், எங்களின் சித்தாந்தம் நிலையானது – வலுவானது. அந்த அடிப்படையில் தான் ஆட்சி – கட்சி ரீதியிலான பொறுப்புகள் வழங்கப்படுகின்றன – நீக்கப்படுகின்றன.
ஆனால், எடியூரப்பா இதில் சற்று வித்தியாசப்பட்டவர். வயது முதிர்வு அவரது ராஜினாமாவை கோருவதற்கான ஓர் முக்கியமான காரணமாக இருந்தாலும், அவருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படாவிட்டால் கட்சியிலிருந்து விலகி தனி கட்சி தொடங்கக்கூடியவர். அது கடந்த காலங்களிலும் நடந்திருக்கிறது. அதே போல், எடியூரப்பாவின் அமைச்சரவையில் உள்ளவர்களே எடியூரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
இந்த நிலையில் தான் எடியூரப்பா ராஜினாமா செய்யவைக்கப்பட்டிருக்கிறார். கட்சி சித்தாந்தந்தை பின்பற்றினால் எந்த உயரிய பொறுப்புக்கும் உயரலாம் அதேபோல் சித்தாந்தத்தை தவிர்த்து தன்முனைப்போடு செயல்பட்டால் பாஜகவில் இதுதான் நிலைமை என்கின்றனர் சிரிப்போடு. கர்நாடக அரசியலில் அடுத்தகட்ட நகர்வுகளை பொறுத்திருந்து பார்க்கலாம்.