உனக்கு நூறு முத்தங்கள் ரஞ்சித் ; சார்பட்டா குறித்த நாசரின் நெகிழ்ச்சி பதிவு!

தமிழ்த் திரையுலக வரலாற்றில் எந்தவித சமரசமங்களுமின்றி தமது கருத்தியலை படைப்புகளின் வழியே தொடர்ச்சியாக பேசிய படைப்பாளிகள் என்ற ஓர் பட்டியலை நாம் தயாரிப்போமேயானால் அதில் நிச்சயம் இயக்குநர் பா.ரஞ்சித்திற்கு முதன்மையான மற்றும் தவிர்க்கவியலாத இடம் உண்டு. ஆம், அப்படியான படைப்புகளுக்கு சொந்தக்காரர் அவர்.
அட்ட கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா என தொடர்ச்சியாக தனது படைப்புகளின் வழி எளிய ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை நேர்த்தியாக பதிவு செய்து வருபவர் இயக்குநர் பா.ரஞ்சித். அந்த வகையில் தற்போது அவரது இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்றுள்ள ‘சார்பட்டா’வில் பெரும்பறைச்சேரி, மதராசப்பட்டிணம் என்றெல்லாம் பெயர் பெற்ற மெட்ராஸின் குத்துச்சண்டை வரலாற்றை மையப்படுத்தி நேர்த்தியாக பதிவு செய்திருந்தார். இத்திரைப்படம் பொதுமக்கள், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றுள்ளது.
சார்பட்டா திரைப்படம் குறித்து திரையுலக பிரபலங்களும் பா.ரஞ்சித்தையும், படக்குழுவினரையும் வாழ்த்திக்கொண்டிருக்க, நடிகர் நாசர் ரஞ்சித்துக்கு ஓர் கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘தம்பி ரஞ்சித் நான் உன்னை பாராட்ட மாட்டேன். உங்கையப் புடிச்சு ஒரு நூறு முத்தங்களைக் கொடுத்து நன்றின்னு ஒரு வார்த்தை மனசார சொல்லுவேன். இப்படியொரு படம் எஞ்சமூகத்துக்கு கொடுத்ததுக்கு’ என ரஞ்சித்தை நெகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளார் நாசர்.