‘சார்பட்டா’ ஓர் முக்கியமான படம் – படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்த உதயநிதி!

திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான அமேசான் பிரைமில் வெளியாகி வெற்றி பெற்றிருக்கிற ‘சார்பட்டா’ திரைப்படம் ஓர் முக்கியமான திரைப்படம் எனவும், நெருக்கடி நிலையை திமுக கையாண்ட விதத்தை காட்சி படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது எனவும் ‘சார்பட்டா’ திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் திமுக இளைஞரணி தலைவரும் – சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின்.
இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், 70-களின் பின்னணியில் குத்துச்சண்டை விளையாட்டை மையப்படுத்தி வெளிவந்துள்ள ’சார்பட்டா பரம்பரை’ முக்கியமான திரைப்படம். அந்த காலத்தில் இருந்த அரசியல் நெருக்கடி நிலையையும், அதை கழகம் – கலைஞர் – கழக தலைவர் எதிர்கொண்ட விதத்தையும் கதையோடு காட்சிப்படுத்தியிருப்பது சிறப்புக்குரியது.
கபிலனாக அசத்தியுள்ள நண்பர் ஆர்யாவுக்கும், கழகத்துக்கார்-ரங்கன் வாத்தியாராக நடித்த பசுபதி சாருக்கும் சார், டான்ஸிங் ரோஸ் ஷபீருக்கும், வேம்புலியாக நடித்த ஜான் கொக்கன், ஜான் விஜய் என ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் கதையில் வாழ செய்துள்ள நண்பர் இயக்குநர் பா.ரஞ்சித்துக்கும் ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சார்பட்டா திரைப்படத்தில் எம்ஜிஆர் தவறாக காட்சி படுத்தப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறதென அதிமுக முன்னணி தலைவர்களுள் ஒருவரான ஜெயக்குமார் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.