கொங்கு நாடு சர்ச்சை ; நாம் தெளிவாக பதிலளித்திருக்க வேண்டும் – அதிமுக நிர்வாகிகள்!

தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களை பிரித்து கொங்கு நாடு என்ற தனி மாநிலம் உருவாக்க வேண்டுமென பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ஓர் சர்ச்சையை கிளப்பிய நிலையில், திமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் இந்த சர்ச்சைக்கு மிக கடுமையான எதிர்வினையாற்றியிருந்தன. தமிழகத்தை துண்டாடி அரசியல் லாபம் அடைய நினைக்க வேண்டாமென பாஜகவுக்கு பதிலளித்தன தமிழக அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும்.
ஆனால், அதிமுக கூட்டணியிலுள்ள பாஜக இவ்வாறான சர்ச்சைகளை கிளப்புகிற போது அது குறித்து எவ்வித எதிர்வினையையும் ஆற்றாமல் அமைதி காத்து வந்தது அதிமுக. இந்நிலையில், நேற்றைய தினம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கட்சியின் மாநில நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் கொங்கு நாடு விவகாரம் குறித்த விவாதம் எழுந்துள்ளது.

அப்போது அதிமுகவின் முன்னணி நிர்வாகிகள், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு முரணான கோரிக்கைகளை யார் முன்வைத்தாலும் நாம் அதனை உடனடியாக எதிர்க்க வேண்டும். கூட்டணியிலுள்ள காரணத்தினாலேயே பாஜகவினர் பேசுவதற்கெல்லாம் நாம் அமைதியாக இருக்க கூடாது என தெரிவித்திருக்கின்றனர் காட்டமாக.
முன்னதாக, பாஜகவுடன் கூட்டணி வைத்த காரணத்தினாலேயே நாம் சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவினோமென அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.