தமிழகத்தில் 90 இலட்சம் பேருக்கு மதுப்பழக்கம் – மத்திய அரசு பகீர் தகவல்!
நாடு முழுவதும் இளைஞர்கள் மத்தியில் குடிப்பழக்கம் மற்றும் போதைப் பழக்கம் அதிகரித்து வருவது குறித்தும் மாநில வாரியாக மது உள்ளிட்ட போதைப்பழக்கங்கள் உள்ளோர் குறித்த புள்ளி விவரங்களை வழங்குமாறு நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பட்ட நிலையில், இது குறித்த புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம்.
அதில், நாடு முழுவதும் சுமார் 15,01,16,000 பேருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாகவும், தமிழகத்தில் சுமார் 90 லட்சம் பேருக்கு மதுப்பழக்கம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கஞ்சா பழக்கதிற்கு ஆளானோர் நாடு முழுவதும் 2,90,00,000 பேர் எனவும், தமிழ்நாட்டில் சுமார் 1,04,000 பேர் கஞ்சா பழக்கத்திற்கு ஆளானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் போதை மாத்திரைகளை சுமார் 1,86,44,000 பேர் பயன்படுத்துவதாகவும், இதில் தமிழ்நாட்டில் 1,54,000 பேர் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம்.
நாடு முழுவதும் 18 வயது முதல் 75 வயது வரையிலானவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் வழங்கப்பட்ட தகவல்களே மேற்கண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.