மேகதாது அணை விவகாரம் ; புதுச்சேரி அரசும் எதிர்ப்பு!

தமிழகத்தின் டெல்டா பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு இன்றியமையாத ஆதாரமாக உள்ள காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் எடியூரப்பா தலைமையிலான கர்நாடக அரசு புதிய அணை கட்ட தொடர்ந்து முயன்று வருகிற நிலையில், அதனை தொடர்ச்சியாக எதிர்த்து வருகிறது தமிழக அரசு.
இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டமும் கூட்டப்பட்டு மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது. மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் முயற்சிகள் அனைத்திற்கும் ஒத்துழைப்போம். மேகதாது அணை தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தின் தீர்மானத்தை அனைத்து கட்சிகளும் நேரில் சென்று மத்திய அரசிடம் வழங்கும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதே சமயம், புதுச்சேரியில் ஆட்சி பொறுப்பினை ஏற்றுள்ள என்.ஆர் காங்கிரஸ் கட்சி பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள காரணத்தினால், காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்ட முயலும் கர்நாடக அரசின் முயற்சியை எதிர்க்குமா என்றெல்லாம் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில், மேற்கண்ட விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசுக்கு புதுச்சேரி அரசும் தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளது. காவிரியின் குறுக்கே தடுப்பணை காட்டினால் காரைக்கால் பகுதி விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது புதுச்சேரி அரசு.