எளியோர்களின் வாழ்வு மலர வந்துதித்த ஏந்தல் ; எந்நாளும் நம் நெஞ்சங்களில் வாழும் காமராஜர்!

தமிழக அரசியல் களத்தில் மாத்திரம் மட்டுமல்ல இந்திய அரசியல் களத்திலும் நேர்மையான, தன்னலம் பாராது பொதுநலத்திற்காக உழைத்திட்ட அரசியல்வாதிகள் யாரென நம் எதிர்ப்படும் எவரையேனும் நீங்கள் கேட்பீர்களேயானால் நிச்சயம் அவர்களிடமிருந்து ஒருவர் பெயர் உங்களுக்கான விடையாக வெளிப்படும். அந்த பெயர் காமராஜர்.
இன்று தமிழக அரசியல் களம், அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் உத்திகளை வகுத்துக்கொடுக்க ஒரு குழு. அந்த குழுவுக்கு நூற்றுக்கணக்கான கொடிகள் ஊதியம். தேர்தலில் வேட்பாளராக போட்டியிட கட்சிக்கு பணம், கூட்டணி ஒப்பந்தம் ஏற்பட கூட்டணி கட்சிகளுக்கு பணம் அவ்வளவு ஏன் தேர்தலில் வாக்களிக்க மக்களுக்கு பணம் என முற்று முழுதிலுமாக பணத்தை மையப்படுத்தியதாக ஆகிவிட்ட சூழலில், தனது 16 ஆம் வயதில் தேச விடுதலைக்காக காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து விடுதலைப்போராட்டத்தில் பங்கெடுத்தது முதல் அக்டோபர் 02, 1975ல் தனது உயிர் இந்த பூவுலகை விட்டு பிரியும் வரையில் தேச நலனையும், பொதுமக்களின் நலனையுமே முதன்மையாக கொண்டு செயல்பட்ட ‘கோமகன்’ காமராஜர்.

விருதுநகரில் சூலை 15, 1903ல் குமாரசாமி – சிவகாமி அம்மாளுக்கு மகனாகப் பிறந்தவர் காமராஜர். ஆம், அந்த மகவு தான் பின்னாட்களில் சிற்றூர்கள் முதல் தமிழகம் முழுவதும் ஏழை – எளியோரும் கல்வியால் மேம்பட வேண்டுமென இருபத்து ஏழாயிரம் பள்ளிகளை திறந்தது.
அன்றாடம் பிழைக்கவே வழியில்லாத போது பள்ளிகளில் போய் அமர்ந்து கொண்டால் எங்கள் வயிற்றின் வாட்டம் தீர்ந்து விடுமா? என்ற எளியோர்களின் உள்ளக்குறிப்பை உணர்ந்து பள்ளிகளில் மதிய உணவு என்ற மகத்தான திட்டத்தை தொடங்கிய மண்ணுலகில் வந்துதித்த விண்ணகத்து தேவதை அவர். காமராஜரின் மதிய உணவு திட்டத்தால் பள்ளிகளில் படிப்பவர்களின் எண்ணிக்கை 37% சதவீதமாக உயர்ந்தது.(பிரித்தானியர் காலத்தில் 7 சதவீதம்). உலக அளவில் பாராட்டை பெற்ற திட்டம் அது. அந்த திட்டமே பின்னாட்களில் எம்ஜிஆரால் சத்துணவு திட்டமாக விரிவு படுத்தப்பட்டது.

ஒரே கட்சியிலிருந்தாலும் ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தினை தீவிரமாக எதிர்த்தவர் காமராஜர். அவரின் ஒவ்வொரு சொல்லும், செயலும் ஏழை – எளிய மக்களுக்கானதாக, அவர்களின் முன்னேற்றத்திற்கானதாகவே இருந்தது. தமிழக முதல்வராய் அந்த தகைமையாளன் இருந்தபோது தமிழகத்தில் பல முக்கிய நீர்பாசனத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
அவை பவானித்திட்டம், மேட்டூர் கால்வாய்த்திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம், சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு ஆகியவையாகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் மலை கிராமங்களுக்குக் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காகக் காமராசரால் கட்டப்பட்ட ‘மாத்தூர் தொட்டிப் பாலம்’ ஆசியாவின் மிகப்பெரிய தொட்டிப்பாலமாக இன்றளவும் உள்ளது.
அதேபோல், காமராஜர் காலத்தில் தமிழகத்தில் தொடங்கப்பட்ட முக்கிய பொதுத் துறை நிறுவனங்களும் பெருந்தொழிற்சாலைகள் பலவும் தொடங்கப்பட்டன. அவை, பாரத மிகு மின் நிறுவனம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம், இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (ICF), நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை, கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை, மேட்டூர் காகிதத் தொழிற்சாலை, குந்தா மின் திட்டம், நெய்வேலி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களில் வெப்ப மின் திட்டம் ஆகியனவும் தொடங்கப்பட்டன.

தமிழகத்தின் முதல்வராக மூன்று முறை (1954–57, 1957–62, 1962–63) பொறுப்பு வகித்த காமராஜர், அக்காலக்கட்டங்களில் முழுவதுமாய் மக்களுக்கான சேவையாளராகத்தான் இயங்கினார். அவரைப்போன்றதொரு எளிமை வாய்ந்த முதல்வரை, தலைவரை இனி தமிழகம் காணப்போவதில்லை என்பது நிதர்சனமான உண்மை.
1963ல் முதல்வர் பொறுப்பிலிருந்து விலகி, இளையோர்கள் ஆட்சியையும், தம்மைப்போன்ற தலைவர்கள் கட்சியையும் வழிநடத்த வேண்டுமென கே – பிளான் என்ற திட்டத்தை முன்மொழிந்தவர். அகில இந்திய அளவிலும் பெரும் மரியாதைக்குரியவராக இருந்த காமராஜர் தான், லால் பகதூர் சாஸ்திரியையும், இந்திரா காந்தியையும் பின்னாட்களில் இந்திய பிரதமராக முன்மொழிந்தவர்.
அவரால் பிரதமர் பொறுப்புக்கு முன்மொழியப்பட்ட இந்திராவால், நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டு ஜெயபிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய், ஆச்சார்ய கிருபாளிணி போன்ற தலைவர்கள் கைது செய்யப்பட்ட சேதி கேட்டு உயிரை விட்டவர். (காந்தியின் பிறந்தநாளில்). அவர் இறந்தபோது பையில் இருந்த சிறிதளவு பணத்தைத் தவிர வேறு வங்கிக் கணக்கோ, சொந்த வீடோ, வேறு எந்த வித சொத்தோ இல்லை. தன் வாழ்நாள் இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்து இந்த தேச விடுதலைக்காகவும், தேசத்து மக்களுக்காகவும் அவர்களின் உயர்வுக்காகவுமே வாழ்ந்து மறைந்திட்ட உத்தமர் காமராஜர்.

அந்திபகல் நாடு, அரசாங்கம், பொதுப்பணிகள் ; என்றுலவ நீயும் இந்நாட்டில் வந்துதித்தாய் என்று காமராஜர் மறைவின் போது கவிஞர் கண்ணதாசன் எழுதிய கவிதை வரிகள்தான் எத்துணை உண்மையானவை .
தங்கமே தண்பொதிகைச் சாரலே தண்ணிலவே
சிங்கமே என்றழைத்துச் சீராட்டுந் தாய்தவிரச்
சொந்தமென்று ஏதுமில்லை துணையிருக்க மங்கையில்லை
தூயமணி மண்டபங்கள் தோட்டங்கள் ஏதுமில்லை
ஆண்டிகையில் ஓடிருக்கும் அதுவும் உனக்கில்லை
என்று காமராஜரின் வாழ்வை பாடியிருப்பார் கண்ணதாசன். அத்தகைய பெருவாழ்வு வாழ்ந்து சென்ற பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளில் அவர் நினைவைப் போற்றுவோம்.