மேகதாது அணை விவகாரம் ; கர்நாடக முதல்வரின் உருவ பொம்மை எரிப்பு!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் புதிய தடுப்பணை கட்ட முயலும் கர்நாடக அரசை கண்டித்து, அம்மாநில முதல்வர் எடியூரப்பாவின் உருவபொம்மையை எரித்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர் தஞ்சாவூர் விவசாயிகள்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய தடுப்பணை ஒன்றினை கட்ட கர்நாடக அரசு தொடர்ச்சியாக முயன்றுவருகிற நிலையில், கர்நாடக அரசின் இந்த முயற்சிக்கு தமிழக அரசு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமெனவும், மத்திய அரசிடமும் இவ்விவகாரம் குறித்து புதிய தடுப்பணை கட்ட கர்நாடகத்திற்கு அனுமதியளிக்க கூடாதென வலியறுத்த வேண்டுமெனவும் தமிழக அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்புகளும் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், தஞ்சையில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட முயலும் கர்நாடக அரசை கண்டித்து அம்மாநில முதல்வரின் உருவ பொம்மையை எரித்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர் காவிரி உரிமை கூட்டமைப்பினர்.
முன்னதாக, நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில், மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது. மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் முயற்சிகள் அனைத்திற்கும் ஒத்துழைப்போம். மேகதாது அணை தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தின் தீர்மானத்தை அனைத்து கட்சிகளும் நேரில் சென்று மத்திய அரசிடம் வழங்கும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.