ஆளுநரின் டெல்லி பயணம்… ஆளுநர் மாற்றப்படுவாரா?

அண்மையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு 43 உறுப்பினர்களுடன் புதிய அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அடுத்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் பெற்றதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இது மரியாதை நிமித்தமானது என அமித்ஷா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று(10.7.2021) மாலை பிரதமரைச் சந்திப்பதற்காக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டெல்லி சென்றுள்ளார்.
மாலை 4 மணிக்கு நடைபெறும் இந்தச் சந்திப்பில் தமிழகத்தில் நிலவும் சூழ்நிலை, அரசியல் கலவரம், கொரோனாபாதிப்பு, அரசியல் கட்சிகளின் கோரிக்கை, எழுவர் விடுதலை ஆகியவை பற்றி விவாதிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமருடனான சந்திப்பிற்குப் பின்னர், ஆளுநர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திக்க இருக்கிறார். இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என கூறப்படுவதுடன் விரைவில் தமிழக ஆளுநர் மாற்றப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி, மத்திய அமைச்சராக இருந்த ரவிசங்கர் பிரசாத் தமிழகத்துக்கு ஆளுநராக நியமிக்கப்படலாம் என்று வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.