மனிதத்தை உயிர்க்க செய்த ஊரடங்கு ; மௌனகுரு அமைப்பினரின் மனிதநேயம்!

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக எண்ணற்ற உயிரிழப்புகளை நாம் சந்தித்து கொண்டிருக்க, கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வது, பொதுமக்களுக்கு தேவையான தடுப்பூசிகளை ஒன்றிய அரசிடமிருந்து பெறுவது, முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்துவது, நோய்த்தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களை சிறப்பு கவனமெடுத்து தனிமைப்படுத்துவது என ஒன்றிய – மாநில அரசுகள் தொடர்ச்சியாக நோய்த்தடுப்பு பணிகளில் இயங்கிக்கொண்டிருக்கின்றன.
அதே சமயம்,கொரோனா பெருந்தொற்றினை எதிர்கொள்ள அரசை மட்டுமே நம்பியிருக்காமல் ஊரடங்கு காலத்தில் சாலையோரங்களில் உள்ள ஏழை – எளியோர்க்கு உணவளிப்பது, ஊரடங்கு பணியிலுள்ள காவல்துறையினருக்கு உதவுவது, தங்களது சொந்த வாகனங்களை அவசர ஊர்திகளாக வழங்குவது, நோய்த்தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த உடல்களை அடக்கம் செய்வது என்றெல்லாம் தன்னார்வலர்களும், சமூக சேவையாளர்கள் பலரும் இயங்கி வருகின்றனர்.

கொரோனாவை எதிர்கொள்ள முதல்வரின் நிவாரண நிதிக்கு குறிப்பிட்ட அளவு தொகையை வழங்குபவர்களை காட்டிலும் மேன்மையாளர்கள் இத்தகைய தன்னார்வலர்கள். நோய்த்தொற்று காலத்திலும் தங்களையும் தற்காத்து கொண்டு, மற்றவர்களுக்கும் உதவுகிற பேருள்ளம் கொண்ட கருணையாளர்கள் இவர்கள்.
அத்தகைய சமூக சேவை அமைப்புகளுள் ஒன்றுதான் மௌனகுரு மிஷன். சென்னை கே.கே நகர் ஆர்.டி.ஓ அலுவலகம் அருகிலுள்ள மௌனகுரு மிஷன் அலுவலகத்தில் ஊரடங்கு காலம் தொடங்கியது முதல் பொதுமக்களுக்கு உணவு வழங்கிவந்துள்ளனர். ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு மௌனகுரு மிஷனின் இந்த சேவை மிகுந்த பயனுள்ளதாக இருந்துள்ளது.
அதே சமயம், ஊரடங்கு சமயத்தில் பல வேறு அமைப்புகளும் பொதுமக்களுக்கு உணவு வழங்க தொடங்க மௌனகுரு மிஷன் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு புது ஐடியா தோன்றியுள்ளது. ஊரடங்கு சமயத்தில் பொதுமக்களுக்கு சத்துள்ள, நோய் எதிர்ப்பு சக்தியை தர கூடிய பொருட்களை வழங்க வேண்டுமென்ற தங்களது எண்ணத்திற்கு செயல்வடிவம் கொடுக்க தொடங்கினர்.

அந்த வகையில், தினமும் காலை சீரக சம்பா அரிசி, கீரைகள் உள்ளிட்ட உடலுக்கு நலம் செய்யக்கூடிய பொருட்களால் ஆன மூலிகை கஞ்சியை தயாரித்து வழங்கிவருகின்றனர். இதனை அன்றாடம் வாங்கி பருகும் பொதுமக்களோ நல்ல நோய் எதிர்ப்பு திறனை அளிக்க கூடிய உணவு இது என சிலாகிக்கின்றனர். இந்த நல்ல முயற்சியை செய்யும் மௌனகுரு அமைப்பினரோ, தங்களுக்கு இந்த செயல் மனநிறைவு அளிக்கிறது என்கின்றனர்.
எவெரென்றே அறியப்படாதவர் மீது பொழியப்படுவது தானே மனிதநேயம்!