செந்தில் பாலாஜி அமைச்சராக வேண்டும் ; வேண்டுதலுக்காக தற்கொலை செய்துகொண்ட உடன்பிறப்பு!

தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்து சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வரவேண்டுமெனவும், செந்தில்பாலாஜி அமைச்சராக வேண்டுமெனவும் வேண்டுதல் வைத்திருந்ததாகவும், வேண்டுதல் நிறைவேறிய காரணத்தில் கரூர் திமுக உறுப்பினர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம், லாலாபேட்டையை சேர்ந்த உலகநாதன் என்பவர், போக்குவரத்து துறையில் நடத்துனராக ஓய்வு பெற்றவர். இன்று கரூர் அருகே மண்மங்கலத்தில் உள்ள காளியம்மன் கோயிலில் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டு பரிதாபமாக உயிரிழந்தார். அவரது வாக்குமூல கடிதத்தில் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்த காரணத்தை தெரிவித்துள்ளார்.
அதில், சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றிபெற வேண்டுமெனவும், செந்தில் பாலாஜி அமைச்சராக வேண்டுமெனவும் வேண்டுதல் வைத்ததாகவும், தனது வேண்டுதல் நிறைவேறிய காரணத்தினாலேயே இம்முடிவை எடுத்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகநாதன் தற்கொலை செய்துகொண்ட மண்மங்கலம் காளியம்மன் கோயில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் குலதெய்வ கோயில் என்பது குறிப்பிடத்தக்கது.