பெண்களை இழிவுபடுத்துவதையே பிழைப்பாக கொண்ட லியோனி – சாடும் அன்புமணி!

பெண்களை இழிவுபடுத்தி பேசுவதையே பிழைப்பாக கொண்ட திண்டுக்கல் லியோனியை தமிழக பாடநூல் நிறுவன தலைவராக நியமிப்பதா என கேள்வியெழுப்பியுள்ளார் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ்.
தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவராக, திமுகவை சேர்ந்த திண்டுக்கல் லியோனி நேற்றைய தினம் தமிழக அரசால் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழக அரசின் இந்த நியமனத்தை கடுமையாக விமர்சித்துள்ளார் அன்புமணி ராமதாஸ்.
இது தொடர்பாக அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது, “தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டிருக்கிறார். பெண்களை இழிவுப்படுத்தி பேசுவதையே பிழைப்பாகக் கொண்ட ஒருவரை இந்த பதவியில் அமர்த்துவதை விட, அப்பதவியை மோசமாக அவமதிக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.
மேலும், “பெண்களின் இடுப்பு, மடிப்பு பற்றி பேசுபவருக்கு படிப்பு பற்றி என்ன தெரியும்? பாடநூல் நிறுவனத்தின் பணி அறிவை வளர்க்கும் பாடநூல்களை தயாரிப்பதாகும். லியோனி தலைமையில் தயாரிக்கப்படும் பாடநூல்களை படிக்கும் மாணவர்களின் கதி என்னவாகும்?” எனவும்,
“திண்டுக்கல் லியோனி சிறந்த ஆசிரியராம். அவரது கடந்த கால பேச்சுகளைக் கேட்டவர்கள் எவரும் இதை நம்ப மாட்டார்கள். பாடநூல் நிறுவனத் தலைவர் என்ற புனிதமான பதவியிலிருந்து லியோனியை நீக்கி விட்டு, தகுதியான கல்வியாளர் ஒருவரை அரசு அமர்த்த வேண்டும்” எனவும் தமிழக அரசை அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.