கர்நாடக அரசின் முயற்சிகளை தடுத்து நிறுத்துவோம் – துரைமுருகன் பேட்டி!

டெல்டா பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு இன்றியமையாத ஆதாரமாக உள்ள காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் எடியூரப்பா தலைமையிலான கர்நாடக அரசு புதிய அணை கட்ட தொடர்ந்து முயன்று வருகிற நிலையில், அதனை தொடர்ச்சியாக எதிர்த்து வருகிறது தமிழக அரசு.
இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்னதாக மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வருக்கு எடியூரப்பா கடிதம் எழுதியிருந்த நிலையில், காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டுவதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோமென தமிழக அரசு தெரிவித்திருந்தது. அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த எடியூரப்பா, மேகதாது அணை கட்டுவதனை ஒருபோதும் கைவிட மாட்டோமென தெரிவித்திருந்தார்.
எடியூரப்பாவின் மேற்கண்ட கருத்துக்கு பதிலளித்துள்ள தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் அத்தனை முயற்சிகளையும் நாம் தடுத்து நிறுத்துவோமென தெரிவித்துள்ளார்.