தமிழக பாஜக தலைவராகிறார் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை?

மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், அதில் இடம்பெற அதிமுக சார்பில் சில தலைவர்களும், பாஜகவின் மாநில தலைவர் எல்முருகன் உள்ளிட்டோர் தொடர்ச்சியாக முயன்று வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டுவந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் முருகனுக்கே மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாக செய்திகள் கசிகின்றன.
மத்திய அமைச்சராக பொறுப்பு வகித்து வந்த ராம்விலாஸ் பஸ்வான் மரணடமைந்த போதிலிருந்தே மத்திய அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பேசப்பட்டு வந்தது. அப்படி மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டால் அதில் இடம்பெற ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத், தம்பிதுரை உள்ளிட்ட அதிமுக தரப்பு முயன்று வந்ததாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருந்தது.
ஆனால், மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இடம்பெறக்கூடுமெனவும், அவருக்கு இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்படக்கூடுமென தெரிகிறது. அவ்வாறு எல்.முருகன் இணையமைச்சராக நியமிக்கப்பட்டால், தமிழக பாஜக தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை நியமிக்கப்படலாமெனவும் தெரிகிறது.