பாமக, பாஜக கூட்டணியால் தோற்றோம் – சி.வி சண்முகம் பகீர் கருத்து!

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியுடனும், பாரதிய ஜனதா கட்சியுடனும் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த காரணித்தினாலேயே, தேர்தலில் அதிமுக தோல்வியுற்றது என தெரிவித்துள்ளார் அக்கட்சியின் முன்னணி தலைவர்களுள் ஒருவரான முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், விசிக, இஸ்லாமிய கட்சிகள் ஆகியன கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அதேபோல், அதிமுக, பாஜக, பாமக, புரட்சி பாரதம் போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன.
தேர்தலின் முடிவில் திமுக தலைமையிலான கூட்டணி அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சி செய்துவரக்கூடிய சூழலில், தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி பொறுப்பிலிருந்த அதிமுக இந்த தோல்வியடைய காரணம், ஒன்றிய பாஜக அரசுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்ததுதான் எனவும், பாமக போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்துதான் எனவும் அதிமுகவின் செய்தி தொடர்பாளராக இருந்த புகழேந்தி போன்றோர் தெரிவித்த காரணத்தினால், அவர்கள் கட்சியிலிருந்தே நீக்கப்பட்டனர்.
இந்நிலையில், அதிமுகவின் தேர்தல் தோல்விக்கு பாமக, பாஜகவுடன் கூட்டணி வைத்தது முக்கிய காரணமென பகிரங்கமாக தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம். இவர் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவியவர் என்பது குறிப்பிடத்தக்கது.