8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள்…குடியரசுத் தலைவர் அறிவிப்பு

அரசியல் சாசனத்தின்படி குடியரசுத் தலைவரின் பிரதிநிதியாக மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஆளுநர்களின் ஐந்தாண்டு காலம் முடிவடைந்த பிறகு புதிய ஆளுநர்களை நியமிப்பது குறித்து குடியரசுத் தலைவர் தான் முடிவெடுப்பார்.
அந்த வகையில், கர்நாடகா, மிசோரம் உட்பட 8 மாநிலங்களுக்குப் புதிய ஆளுநரை நியமித்து குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து, குடியரசுத் தலைவர் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’கர்நாடக ஆளுநராக தாவர்சந்த் கெலாட்டும், ஹரிபாபு கம்மபதி மிசோரம் மாநில ஆளுநராகவும், மங்குபாய் படேல் மத்தியப்பிரதேச மாநில ஆளுநராகவும், ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இமாச்சல் பிரதேச மாநில ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மிசோரம் மாநில ஆளுநராக பணியாற்றி வந்த ஸ்ரீதரன்பிள்ளை கோவா ஆளுநராகவும், ஹரியாணா மாநில ஆளுநராக பணியாற்றி வந்த சத்யதேவ் நாராயண் ஆர்யா திரிபுரா ஆளுநராகவும், திரிபுரா மாநில ஆளுநராக பணியாற்றி வந்த ரமேஷ் பைஸ் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகவும், இமாச்சல் மாநில ஆளுநராக பணியாற்றி வந்த பண்டாரு தத்தாத்ரேயா ஹரியாணா மாநில ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.