ஏ.கே ராஜன் ஆணையத்திற்கு எதிரான வழக்கு ; மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!

மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வின் காரணமாக தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே ராஜன் தலைமையிலான ஆணையத்தை நியமித்துள்ளது தமிழக அரசு. ராஜன் ஆணையமும் நீட் நுழைவுத்தேர்வு தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டுவரக்கூடிய சூழலில், இந்த ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டுமென தமிழக பாஜக பிரமுகர் கரு.நாகராஜன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
மேற்கண்ட வழக்கிற்கு உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்திருந்த தமிழக அரசு, வெறும் விளம்பரத்திற்காகவே இவ்வாறான வழக்குகள் தொடுக்கப்படுவதாகவும், அரசியல் நோக்கத்துடன் தொடுக்கப்பட்ட இந்த வழக்கினை தள்ளுபடி செய்யவேண்டுமென தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இன்றைய தினம் மேற்கண்ட வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஒன்றிய அரசு தமிழக அரசின் மனுவுக்கு பதிலளிக்க வேண்டுமெனவும், இவ்வழக்கினை எதிர்வரும் 13ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் தெரிவித்துள்ளது.