மேகதாது அணை விவகாரம் – முதல்வர் ஸ்டாலினுக்கு எடியூரப்பா கடிதம்!

காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை ஒன்றினை கட்ட கர்நாடக அரசு முயன்று வருகிறது. ஆனால், தமிழகத்தின் டெல்டா பகுதி விவசாயத்திற்கு ஆதாரமாக உள்ள காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு புதிய அணியினை கட்டுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது .
ஒன்றிய அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, கர்நாடக அரசின் புதிய அணை கட்டும் திட்டத்தினை நிறுத்த வேண்டுமென தமிழக விவசாயப்பெருங்குடி மக்களும், தமிழக அரசியல் அமைப்புகள் மற்றும் கட்சிகளும் ஒரே குரலில் தெரிவித்து வருகின்றன.
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்ற பின்னர் முதல் முறை நடைபெற்ற பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போதும் மேற்கண்ட விவகாரம் குறித்து பேசியதுடன், மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்டத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது என வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். அதில், மேகதாதுவில் புதிய அணை கட்டப்பட்டால் இரு மாநில மக்களுக்கும் பயனளிக்க கூடியதாக இருக்கும். தமிழகத்தின் காவிரி படுக்கையில் இரு புதிய மின் திட்டங்கள் செயல்படுகிறது. ஆனால், இது குறித்து கர்நாடக அரசிடம் கலந்தாலோசிக்கவில்லை.
தமிழகம் – கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களுக்கிடையே நல்லுறவை மேம்படுத்த விரும்புகிறேன். ஆகவே, புதிய அணை கட்டும் விவகாரம் தொடர்பாக இரு மாநிலங்களுக்கிடையேயான பேச்சுவார்த்தைக்கு தயார் என தெரிவித்துள்ளார்.