ஒன்றிய அரசு எனக்கூறுவது நியாயமா? – ஓபிஎஸ் கேள்வி!

மத்திய அரசினை ஒன்றிய அரசு என குறிப்பிடுவது நியாமில்லை. தமிழக அரசு இவ்வாறான செயல்பாடுகளில் ஈடுபடாமல் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்திட வேண்டுமென தெரிவித்துள்ளார் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம்.
மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்தது முதல், மத்திய அரசினை ஒன்றிய அரசு என்றே குறிப்பிட்டு ஆவணங்கள் வெளியிடப்பட்டுவருகின்றன.
ஆனால், இத்தகைய செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ள கூடியவை அல்ல, பிரிவினைவாத கருத்துக்களையே இத்தகைய செயற்பாடுகள் மேலோங்க செய்யுமென பாஜக தலைவர்கள் தெரிவித்துவரும் நிலையில், இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஓ.பன்னீர்செல்வம், “மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என கூறி சிறுமைப்படுத்துவது மக்கள் நலன் பயக்கும் செயல் அல்ல.
இந்திய நாடு பிரிக்க முடியாத ஒன்றிணைக்கப்பட்ட ஒரு தேசம். மத்திய அரசை ஒன்றிய அரசு என கூறுவது நியாயம் இல்லை. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் திமுக அரசு கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், ஆளுநர் உரையிலிருந்து ‘ஜெய்ஹிந்த்’ என்ற வார்த்தையை நீக்கியதால் தமிழகம் தலை நிமிர்ந்தது என கூறுவது நியாயமா? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.