தமிழக அரசியலில் பிரிவினைவாத சக்திகள் ; டெல்லியில் பகீர் கிளப்பிய பாஜக!
தமிழக அரசியலில் பிரிவினைவாத சக்திகளின் செயற்பாடுகள் அதிகரித்து வருவதாக, தமிழக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் நடைபெற்ற பிரதமர் மோடி அவர்களுடனான சந்திப்பில் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, பாமக போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெற்ற பாஜகவின் எம்.ஆர் காந்தி, வானதி சீனிவாசன், நைனார் நாகேந்திரன் உள்ளிட்ட நான்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர்களோடு டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்.
பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், “ஏற்கனவே தமிழகத்திற்கு தேவையான அனைத்து திட்டங்களையும் மத்திய அரசு செய்துவருகிறது. தற்போது, தமிழகத்திற்கு தேவையான சில திட்டங்கள் குறித்து பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். தென் தமிழகத்திற்கு தேவையான தொழிற்சார் திட்டங்கள் குறித்தும் தெரியப்படுத்தியிருக்கிறோம்.” என்றார்.
மேலும், தமிழகத்தில் தற்போது அதிகரித்து வரக்கூடிய தேசிய பிரிவினைவாத கருத்துக்கள் – சக்திகள் குறித்தும் தெரியப்படுத்தியிருக்கிறோம். மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடம் கொண்டு செல்ல பிரதமர் எங்கள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்” எனவும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.