சென்னை ஐஐடியில் மாணவர் மர்ம மரணம் ; சிபிஐ விசாரணை கோரும் முத்தரசன்!

சென்னை ஐஐடியில் உன்னிகிருஷ்ணன் என்ற மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதும், உதவிப்பேராசிரியர் ஒருவர் கல்லூரிக்குள் நிலவும் சாதிய பாகுபாடுகளால் பணியிலிருந்து விலகியிருப்பதுவும் சமூக நோக்கர்களை அதிர்ச்சியடைய செய்துள்ள நிலையில், மேற்கண்ட சம்பவங்கள் குறித்து தமிழக அரசு விரிவான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், சிபிஐ விசாரணை நடத்திட ஒன்றிய பாஜக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை ஐஐடி கல்லூரியில் நிலவி வரும் சாதிய பாகுபாடுகள் காரணமாக மனிதப்பண்பு மற்றும் சமூக அறிவியல் துறை உதவிப் பேராசியர் விபின் பணியிலிருந்து விலகி இருப்பதும், மாணவர் உன்னிகிருஷ்ணன் (30) எரிந்த நிலையில் பிணமாக கிடந்ததும் பேரதிர்ச்சியளிக்கிறது.
வளர்ந்து வரும் நாகரிகம், பண்பாடு, அறிவியல் கண்ணோட்டத்தின் அடையாளமாக திகழ்ந்திட வேண்டிய சென்னை ஐஐடி, காட்டுமிராண்டி காலத்தை நினைவூட்டி வருவது வெட்கப்பட வேண்டிய செயலாகும். அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிகழ்வின் மீது ஐஐடி நிறுவனம் வாய் திறக்காமல் அமைதி காத்து வருவது ஆழமான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
விரல்விட்டு எண்ணத்தக்க சில சாதிவெறியர் ஆதிக்கத்தில் நிர்வாகம் சிக்கியுள்ளதா என்ற கேள்வி எழுகிறது. மதவெறி, சாதி வெறி சக்திகளை உயர்கல்வி நிறுவனத்தில் முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டியது உடனடித் தேவையாகும். முன்னர் அம்பேத்கர் – பெரியார் ஆய்வு வட்டம் அமைக்கப்பட்டபோதும் சிலரால் அமளிதுமளி செய்யப்பட்டது.
இந்த உயர்கல்வி நிறுவனத்தின் மாணவர் சேர்க்கையிலும், பணி நியமனங்களிலும் இடஒதுக்கீடு வழங்கி சமூகநீதி வழங்க வேண்டும். தொடரும் சாதியப் பாகுபாடுகள் உள்பட அனைத்து மர்மச்சம்பவங்கள் குறித்தும் விரிவான விசாரணை நடத்த வேண்டும். இது தொடர்பாக ஒன்றிய அரசுக்கு வலுவான அழுத்தம் கொடுத்து, சட்டபூர்வ நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.